SKIP TO MAIN CONTENT

முன்னாள் பிரதமர் மீதான நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

முன்னாள் பிரதமர் Scott Morrison மீது censure என்ற கண்டனத்தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20221129001736509324-minihighres.jpg
Former Australian Prime Minister Scott Morrison reacts during Question Time in the House of Representatives at Parliament House in Canberra Credit: AAP Image/Lukas Coch

3 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

முன்னாள் பிரதமரும் பெடரல் நாடாளுமன்றத் தொகுதியான Cook தொகுதியின் உறுப்பினருமான Scott Morrison மீது, ஆளுங்கட்சியான லேபர் கட்சி சார்பில் லேபர் கட்சியின் நாடாளுமன்றத்குழுவின் தலைவர் Tony Burke கொண்டுவந்த censure என்ற கண்டனத்தீர்மானம் 86-50 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஒருவர் மீது censure என்ற கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.

‘இது சிறிய விவகாரமல்ல. பொறுப்பான ஒரு அரசின் கொள்கைகளின் அடிப்படையானது. பதவிகளைப் பொறுப்பேற்றது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்காதது அரசின் மீதுள்ள நம்பிக்கையையேசிதைப்பதாகும்’ என்று இந்த கண்டனத்தீர்மானத்தை முன்வைத்த Tony Burke கூறினார்.

மட்டுமல்ல, ‘ Cook தொகுதி உறுப்பினர் எந்த அமைச்சுப் பொறுப்புகளுக்குத் தன்னை நியமித்துக்கொண்டாரோ அந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும் இது பற்றித்தெரிவிக்கவில்லை; அமைச்சரவைக்கும் தெரிவிக்கவில்லை; நாடாளுமன்றத்திற்கும் தெரிவிக்கவில்லை; ஆஸ்திரேலிய மக்களுக்கும் தெரிவிக்கவில்லை’ என்று Tony Burke கூறினார்.

20221202001737717561-minihighres.jpg
Prime Minister Anthony Albanese and Tony Burke Credit: (AAP Image/Mick Tsikas)

லிபரல் கட்சி உறுப்பினரான Bridget Archer உம் ஆளும் கட்சியுடன் இணைந்து, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது ‘ Scott Morrison பதவி விலகவேண்டும் ‘ என்று கூறியிருந்த லிபரல் கட்சி உறுப்பினரும் தற்போதைய உள்நாட்டு அலுவல்கள் நிழல் அமைச்சராகவும் உள்ள Karen Andrews வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

‘இது அதிகார துஷ்பிரயகமாகும். அத்தோடு எமது மக்களாட்சி முறைமீது செய்யப்பட்ட நிந்தனையும் ஆகும். முன்னாள் பிரதமர் அவரது செயலுக்காக மன்னிப்பு கோரவேண்டும்’ என்று இந்த தீர்மானம் தொடர்பாகப் பேசிய பிரதமர் Anthony Albanese கூறினார்.

அத்தோடு, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபின்னர் இது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி Virginia Bell அவர்களின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைபடுத்தப்போவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Scott Morrison செய்தது சட்டத்திற்கு முரண் இல்லை என்றபோதும் முன்னாள் பிரதமர் Scott Morrison இன் இந்த செயல்பாடு கவனமாகச் சிந்தித்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்றும் இது தேவையற்றதும், மிகையானதும் விநோதமானதுமாகும்’ என்றும் Bell தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Scott Morrison தனது பதவிக்காலத்தில் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் 5 அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் தன்னை ரகசியமாக நியமித்துக்கொண்டார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் கசிந்தது தொடர்பாகவே இந்த censure motion ஐ ஆளும் Labour கட்சி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே ஆளும் கட்சியின் நிலைப்பாடாகும்.

SCOTT MORRISON CENSURE MOTION
Former prime minister Scott Morrison speaks during a censure motion against former prime minister Scott Morrison in the House of Representatives at Parliament House in Canberra, Wednesday, November 30, 2022. (AAP Image/Mick Tsikas) Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

ஏற்கனவே அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இருந்தபோது தான் ரகசியமாக உள்நாட்டு அலுவல்கள், நிதி, நலத்துறை மற்றும் வளங்கள் தொடர்பான அமைச்சுக்களையும் பொறுப்பேற்க பல காரணங்கள் இருந்ததாக Scott Morrison கூறுகிறார். Covid19 பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த அமைச்சுப் பொறுப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியிருக்கிறார்.

கண்டனத் தீர்மானம் - Censure motion குறித்த விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய Scott Morrison ‘இது ஒரு dormant redundancy’ ‘தற்காலிக செயலற்ற உபரியான ஏற்பாடு’ மட்டுமே என்றும் இந்த அமைச்சுக்களின் அதிகாரங்களைத் தான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இது அசாதாரண நிலை உருவானால் பயன்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்டதே ஒழிய வேறில்லை என்றார். மற்றைய அமைச்சர்களின் அதிகாரங்களைத் தான் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் கூறிய அவர், இது ஒரு அரசியல் மிரட்டல் -intimidation என்பதைத்தவிர வேறில்லை’ என்றும், தான் மன்னிப்புக்கோரமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

இந்த கண்டனத்தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் Scott Morrisonக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தாது என்றபோதிலும் Censure என்பது, ஒரு உறுப்பினருடைய செயல்பாடு தொடர்பாக ஒரு நாடாளுமன்றம் விதிக்கக்க கூடிய கடுமையான கண்டனம் ஆகும். இது ஒரு symbolic- அடையாள கண்டனம் மட்டுமே ஒழிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் Scott Morrison இன் பதவிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆனால், Greens கட்சியின் தலைவர் Adam Bandt, மேலும் தடைகளைக் கொண்டுவரும் நோக்கத்தோடு, முன்னாள் பிரதமரின் நடவடிக்கை தொடர்பாக, அதிகாரம் மிக்க privileges committee என்ற குழுவுக்கு முறைப்பாடு செய்ய உத்தேசித்திருப்பதால், இந்த குழுவுக்கு, Scott Morrison நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடைவிதிக்கவும் மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்திக்கவும் அதிகாரம் உண்டு.

அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பவர் கவர்னர் ஜெனரல் என்ற வகையில் Scott Morrison இந்த மேலதிக பதவிகளுக்கு தன்னை நியமித்துக்கொண்டது பற்றி கவர்னர் ஜெனரல் David Hurley பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.

It has been confirmed Governor-General David Hurley (right) did appoint then-prime minister Scott Morrison (left) to administer other ministerial portfolios, but no details have so far been provided.
Governor-General David Hurley (right) & then-prime minister Scott Morrison (left) Source: AAP

ஆனால் முன்னதாக, ‘Scott Morrison ஐ மேலதிக அமைச்சுப்பொறுப்புக்களில் நியமித்ததில் எந்த சட்ட முரண்பாடும் இல்லை; இந்த அமைச்சுப்பொறுப்புகள் பற்றி அமைச்சரவைக்கோ பொதுமக்களுக்கோ தெரிவிப்பது தன்னுடைய பணியல்ல’ என்றும் கவர்னர் ஜனரல் David Hurley கூறியிருந்தார்.

பதவியிலிருக்கும் அரசின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்படுவதே தனது பொறுப்பு என்றும் இந்த நியமனங்கள் தொடர்பாக அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கும் என்று தான் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

Scott Morrison இன் ஆலோசனைப்படி கவர்னர் ஜனரல் அவரை மேலதிக பொறுப்புகளில் நியமிக்க மறுத்திருந்தால் constitutional crisis என்ற அரசியல் சாசனம் தொடர்பான ஒரு இக்கட்டான நிலை உருவாகியிருக்கும் என்பதால் கவர்னர் ஜெனரல் பிரதமரின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now