ஆஸ்திரேலியாவல் பயன்பாட்டிலுள்ள கட்டண முறைகள் தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டத்தின்கீழ் Cheque- காசோலை பயன்பாடு இல்லாதொழிக்கப்படவுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் காசோலை பயன்பாடு படிப்படியாக நீக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
Cashless மற்றும் மொபைல் ஊடான நிதி பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தும் விதத்தில் பெரிய சீர்திருத்தங்களுக்கான தனது திட்டத்தை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers இன்று கோடிட்டுக் காட்டினார்.
சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய வங்கிச் சங்கத்தில் (Australian Banking Association (ABA)) ஆற்றிய உரையில், ஆஸ்திரேலியாவின் மிகப்பழைய கொடுப்பனவு பொறிமுறைகள் நாட்டின் உற்பத்தித் திறனைத் தடுத்து நிறுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.
காசோலை பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தும் அதேநேரம் மிகவும் திறமையான புதிய கட்டண தளத்தை அறிமுகப்படுத்துவது ஆஸ்திரேலியாவை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பாதையில் முன்னிறுத்தும் என்று Jim Chalmers கூறினார்.
பணம் செலுத்தும் முறைகளை ஒழுங்குபடுத்துவதில் ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் விரிவாக்கப்பட்ட பங்கையும், ஒரு புதிய கட்டண உரிம முறை தொடர்பிலும் அவர் எதிர்வுகூறினார்.
இதேவேளை இச்சீர்திருத்தங்கள் எதிர்கால தொழில்நுட்பத்தில் வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் துறையின் செயற்திறனை அதிகரிக்கும் என ABA தலைமை நிர்வாகி Anna Bligh கூறினார்.
ஏற்கனவே காசோலைகளின் பயன்பாடு நாட்டில் அருகிவருகின்ற பின்னணியில், தனிநபர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆகும் செலவுகளே காசோலைகளின் பயன்பாடு குறைவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
வங்கி காசோலையை வழங்க வங்கிகள் $20 வரை வசூலிக்கின்றன மற்றும் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட காசோலைகளை எழுதுவதற்கான செயலாக்கக் கட்டணத்தை எதிர்கொள்கின்றனர்.
இவற்றைக் கருத்திற்கொண்டு மாநிலங்கள், பிராந்தியங்கள், தொழில்துறை மற்றும் சமூக குழுக்களுடன் கலந்தாலோசித்த பிறகு காசோலைகளின் பயன்பாடு 2030 க்குள் நிறுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
