குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்துவந்த 91 வயது மார்கரெட்டுக்கு கணவன் இல்லை.
வாழ்நாள் சேமிப்பாக 5 லட்சம் டொலர்கள் அவர் வசம் இருந்திருக்கிறது.
ஒரு நாள் இணையமோசடியில் ஈடுபடும் நபர் மார்கரெட்டைத் தொடர்புகொண்டு தனது பெயர் ஆண்ட்ரூ வில்லியம் என்றும், மோசடிக்கார்களைக் கண்டறிய ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிபோல் வேடம் அணிந்த அந்நபர், மார்கரெட்டின் பணத்தை யாரோ திருட முயற்சிப்பதாகவும், அவர் தனது பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஒரு பாதுகாப்பான வங்கியில் பணத்தை வைக்குமாறும், இதன்மூலம் காவல்துறையினரால் இணையத்திருடர்களைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்கரெட்டிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ இதைச் சொல்ல வேண்டாம் என்றும் அது காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மார்கரெட்டை ஏமாற்றிய நபர் அவரை நம்பவைத்திருக்கிறார்
மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுவதாக நினைத்த மார்கரெட் சுமார் 10 மாத இடைவெளியில் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்களை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார்.
மார்கரெட் தனது புதிய கணக்கு ஒன்றில் இருந்து பணம் எடுக்க முயன்றபோது அது ஒரு மோசடி என்பதை உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தபோது அரை மில்லியன் டொலர்களை அவர் இழந்துவிட்டார்.
ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் தனது இக்கதையை மார்கரெட் A Current Affairஇடம் பகிர்ந்திருந்தார்.
இதேவேளை காவல்துறையைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையின் சைபர் கட்டளைக்கான உதவி ஆணையர் கிறிஸ் கோல்ட்ஸ்மிட், "காவல்துறை, உங்களை அழைத்து பணத்தை மாற்றவோ அல்லது உங்கள் கணக்கில் இருந்து எங்கும் பணத்தை அனுப்பவோ கேட்காது" என வலியுறுத்தினார்.
நீங்கள் மோசடிக்குள்ளானதாக சந்தேகித்தால், முன்கூட்டியே புகாரளிப்பது முக்கியம். இதன்மூலம் வங்கிகளும் காவல்துறையும் விசாரணை செய்து பணத்தை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மார்கரெட் மிகவும் தாமதமாக இதைக் கண்டுபிடித்ததால் அவர் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழிப்பதற்கு தனது மகன் கட்டிய வீட்டை விற்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
