சிட்னியில் குடிவரவு தொடர்பான மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் மூவர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017இல், 46 வயதுடைய பெண் ஒருவர், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுத்தருமாறு சிட்னியிலுள்ள குடிவரவு நிறுவனம் ஒன்றிடம் கோரியிருந்ததாகவும், இதற்கான கட்டணமாக சுமார் 1.5 மில்லியன் டொலர்களை குறித்த நிறுவனத்திற்கு அப்பெண் செலுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து Chatswood-இல் உள்ள குறித்த குடிவரவு நிறுவனத்தில் பணிபுரிந்த மூவர், 1.5 மில்லியன் டொலர்களை தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகவும், அந்தப் பெண்ணுக்கு முதலில் ஆஸ்திரேலிய விசாவைப் பெற உதவாமல், போலி ஆஸ்திரேலிய குடியுரிமை ஆவணங்கள் உட்பட போலியான ஆவணங்களை இவர்கள் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, சிட்னியின் தெற்கில் உள்ள Narweeயில் உள்ள வீட்டிலிருந்து 36 வயதுடைய நபர் ஒருவர் மே 4 அன்று கைது செய்யப்பட்டார்.
இந்நபர் மீது, ஏமாற்றுவதன் மூலம் நேர்மையற்ற முறையில் நிதி ஆதாயம் பெற்றதாகவும், ஒரு நிறுவனத்தின் அதிகாரியாக இருந்துகொண்டு ஏமாற்றுவதற்காக தவறான அறிக்கையை வெளியிட்டதாகவும், குற்றவியல் குழுவில் பங்களித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் சிட்னியின் மேல் வடக்குக் கரையில் உள்ள Turramurraவில் ஒரு வீட்டிலிருந்து மொபைல் போன்கள், மடிக்கணினிகள், hard drives, பாஸ்போர்ட் உட்பட மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பில் 42 வயதான ஆணும் 39 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டு Hornsby காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மோசடி மூலம் நேர்மையற்ற முறையில் பணம் பெற்றமை, குற்றவியல் குழுவில் பங்குவகித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் சுமத்தப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ள அதேநேரம் இவர்கள் அடுத்த மாதம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
