ஐந்து பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த அதேநேரம், அவர்களின் அனுமதியின்றி நெருக்கமான படங்களைப் பதிவு செய்த விவகாரத்தில், இந்தியப் பின்னணி கொண்ட, சிட்னியைச் சேர்ந்த பாலேஷ் தன்கர் குற்றவாளி என இனங்காணப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 24 ஆம் தேதி தன்கர் மீதான 39 குற்றச்சாட்டுகளை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் தன்கரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதன் பின்னர் அவர் மீண்டும் தடுப்புக்காவலுக்குத் திரும்பியதாக நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு காவல்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டபோது, அவரது வீட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை கொடுத்து, அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மே 12 அன்று நடைபெறவுள்ள நீதிமன்ற அமர்வில் தன்கருக்கான தண்டனை தேதி அறிவிக்கப்படும்.
இதேவேளை பாஜக பிரமுகரான தொழிலதிபர் பாலேஷ் தன்கர் 'Overseas Friends of Bharatiya Janata Party (OFBJP)' எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தன்கரின் செயலைக் கண்டிப்பதாக OFBJP அமைப்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
மேலும் Indian Overseas Congress Australia தலைவர் மனோஜ் ஷியோரன், இவ்விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
பாஜக பிரமுகரான பாலேஷ் தன்கர் இந்தியப் பிரதமர் உட்பட உயர்மட்ட பாஜக தலைவர்களுடன் தொடர்புடைகளைப் பேணியவர் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க NSW காவல்துறை மறுத்துவிட்டது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
