கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்திய புதிய Aged Care Labour ஒப்பந்தத்தின்கீழ், முதியோர் பராமரிப்பு துறையில் பணிபுரிய, வெளிநாட்டிலிருந்து தகுதியான பராமரிப்பு பணியாளர்களை வரவழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வெளிநாடுகளிலுள்ள செவிலியர் ஆதரவு பணியாளர், தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர் மற்றும் முதியோர் பராமரிப்பாளர் அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பாளர் போன்ற பராமரிப்புப் பணியாளர்களை, முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள், Temporary Skill Shortage (subclass 482) விசாவின் கீழ் வரவழைக்க முடியும்.
இவ்வாறு வரவழைக்கப்படும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு, Employer Nomination Scheme (subclass 186) விசா திட்டத்தின் கீழ் முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் sponsor செய்ய முடியும்.
இதற்கு ஏதுவாக standard skilled விசா நிபந்தனைகளிலிருந்து முக்கிய சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது:
- Employer Nomination Scheme மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு.
- நெறிப்படுத்தப்பட்ட விசா nomination மற்றும் முன்னுரிமை விசா விண்ணப்ப பரிசீலனை.
- Post-qualification பணி அனுபவம் தேவையில்லை.
- தொடர்புடைய சமூக மொழி திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ஆங்கில மொழிப் புலமை தொடர்பான சலுகைகள்.
- ஆண்டுச் சம்பளம் குறைந்தபட்சம் $51,222 அல்லது ஆஸ்திரேலிய Market Salary Rate- எது அதிகமோ அது.
பராமரிப்புப் பணியாளர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்புடைய நேரடி பராமரிப்புத் தொழிலில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முழுநேரப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசு கூறுகின்றபோதிலும், இரண்டு வருட பணி அனுபவம் ஒரு குறிப்பிட்ட முதலாளி அல்லது விசா துணைப்பிரிவுடன் இணைக்கப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் ஊடாக வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விசா செயல்முறைகள் நெறிப்படுத்தப்படுவதால், முதியோர் பராமரிப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் ஒன்று என முதியோர் பராமரிப்புத்துறை அமைச்சர் Anika Wells கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்புப் பணியாளர்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில், இந்தப் புதிய முயற்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
