Highlights
- மெல்பனில் நடைமுறையிலுள்ள முடக்கநிலை வியாழன் நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.
- விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பனில் புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான முதற்கட்ட தொடர்பு கிடைத்திருக்கிறது.
விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவலுடன் தொடர்புடையவர் எனவும் Acting Premier James Merlino அறிவித்தார்.
கிட்டத்தட்ட 28 ஆயிரத்தி 500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கு மாத்திரம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் மெல்பனில் தற்போது நடைமுறையிலுள்ள முடக்கநிலை நாளை நள்ளிரவு 11.59 மணி முதல் நீக்கப்பட்டு கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவருவதாக Acting Premier James Merlino அறிவித்தார்.
இதன்படி வியாழன் நள்ளிரவு 11.59 மணிமுதல் மெல்பனில் பெருநகரில் வாழ்பவர்கள்
- வீடுகளை விட்டு வெளியே செல்ல காரணம் தேவையில்லை.
- ஆனால் தமது வீடுகளிலிருந்து 25 கிலோமீட்டர்களுக்கு உள்ளிட்ட இடங்களுக்கு மாத்திரமே பயணம் செய்யமுடியும்.
- வேலை, கல்வி, பராமரிப்பு பெற அல்லது வழங்க மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய காரணங்களுக்காக மக்கள் 25 கிலோமீட்டர்களுக்கு வெளியே பயணம் செய்யலாம்.
- அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு எவரும் மெல்பன் பெருநகரிலிருந்து Regional விக்டோரியாவுக்கு செல்லமுடியாது.
- வீடுகளில் விருந்தினர்களுக்கு அனுமதியில்லை.
- வெளியிடங்களில் 10 பேர் வரை ஒன்றுகூட முடியும்.
- வெளியரங்குகளில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. ஆனால் வீடு தவிர ஏனைய அனைத்து உள்ளரங்குகளிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
- கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உணவகங்கள் மீண்டும் வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.
- பள்ளிகள் மீண்டும் நேரடி கற்றல் செயற்பாட்டிற்கு மாறலாம்.
இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
READ MORE

COVID-19 ஒரு உயிரியல் ஆயுதமா?
அதேபோன்று Regional விக்டோரியாவில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன. இதன்படி
- வீடுகளுக்கு நாளொன்றுக்கு இரு விருந்தினர்களுக்கு அனுமதி உண்டு.
- வெளிப்புற ஒன்றுகூடல்களில் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
- விக்டோரியாவுக்குள் எங்கும் பயணம்செய்யலாம்.
இதேவேளை மெல்பனில் ஏற்பட்டுள்ள புதியவகை Delta கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளபோதிலும் இவரிடமிருந்து ஏனையோருக்கு இத்தொற்று எப்படிப் பரவியது என்பது இதுவரை தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

