2022 ஜனவரி மற்றும் அக்டோபர் 2022 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கென பயன்படுத்தியதாகக் கூறப்படும் மெல்பன் தம்பதியர் மீது 'அடிமை' வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மெல்பனைச் சேர்ந்த 44 வயது ஆணும் 29 வயதுடைய அவரது துணையும், இன்று மெல்பன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை எதிர்கொண்டனர்.
மனித கடத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகப்படும்வகையில் காணப்பட்ட பெண் தொடர்பில், ஒரு சுகாதாரத்துறை பணியாளர் அளித்த முறைப்பாட்டையடுத்து, ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறையினர் அக்டோபர் 2022 இல் விசாரணையைத் தொடங்கியிருந்தனர்.
தொடர் விசாரணைகளின் விளைவாக, 27 அக்டோபர் 2022 அன்று மெல்பன் Point Cookஇல் உள்ள வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதையடுத்து 17 நவம்பர் 2022 அன்று, ஒரு விரிவான விசாரணைக்குப் பிறகு தம்பதியர் மீது பின்வரும் இரண்டு குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Criminal Code 1995 (Cth)இன் உட்பிரிவு 270.3(1)(a)க்கு முரணாக ஒரு அடிமையை வீட்டில் வைத்திருந்தமை.
Criminal Code 1995 (Cth)இன் உட்பிரிவு 270.5(1)க்கு மாறாக, வற்புறுத்துதல் மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி மற்றொரு நபரை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தியிருந்தமை
இதேவேளை குறித்த வழக்கில் Criminal Code 1995 (Cth)இன் உட்பிரிவு 270.3(1) க்கு மாறாக, அடிமையின் மீது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தியதற்காக கூடுதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
தம்பதியினர் குறித்த பெண்ணின் மீது கட்டாயக் கட்டுப்பாட்டைப் பிரயோகித்ததாகவும், உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தியதாகவும், அவரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தியதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த இருவருக்கும் அதிகபட்சமாக தலா 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
இதேவேளை மனித கடத்தலை தடுப்பதில் அனைவரும் பங்கு வகிக்க முடியும் எனவும், மனிதக்கடத்தலாக இருக்குமா எனற சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை கண்டால் அதைப்பற்றி முறையிடுமாறு மக்களை ஊக்குவிப்பதாகவும் AFP துப்பறியும் கண்காணிப்பாளர் Simone Butcher
தெரிவித்தார்.
If you or someone you know is a victim of human trafficking or slavery offences, you can make a report to the AFP by calling 131AFP (131 237).
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
