ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த செயலாக்க மையமான நவுறுவில் வெறும் 22 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள போதிலும், இப்பரிசீலனை மையத்திற்கென இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு 485 மில்லியன் டொலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
திங்கள்கிழமை மாலை செனட் மதிப்பீட்டின் விசாரணையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இப்புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும் அங்குள்ள ஒரு நபருக்கு 22 மில்லியன் டொலர்கள் செலவளிக்கப்படுவதான கிரீன்ஸ் கட்சியின் விமர்சனத்தை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
அடுத்த ஆண்டில் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் எவரும் நவுறுவில் இருக்கமாட்டார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்காலத்தில் படகுகள் ஏதேனும் வரும் பட்சத்தில் அதிலுள்ளவர்களை தற்காலிகமாக தங்கவைத்து பரிசீலிப்பதற்கென இம்மையத்தைப் பராமரிப்பதற்கு, ஆண்டுக்கு ஆகக்குறைந்தது 350 மில்லியன் டொலர்கள் செலவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நவுறுவில் தற்போதுள்ள 22 அகதிகளுக்கு தலா 22 மில்லியன் என்ற அடிப்படையில், இந்த ஆண்டு 485 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா செலவிடுவதாக கிரீன்ஸ் கட்சியின் செனட்டர் Nick McKim வெளியிட்ட விமர்சனத்திற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சின் இணைச் செயலர் Stephanie Foster, இந்த பரிசீலனை மையத்தைப் பராமரிப்பதற்கான செலவுகள் தனிநபர்களின் எண்ணிக்கைக்குச் சமம் அல்லவெனவும், அதை பராமரிக்க ஒரு அடிப்படைச் செலவு உள்ளது எனவும் கூறினார்.
2022-23 நிதியாண்டில் செலவுகள் 485 மில்லியன் டொலர்களிலிருந்து குறையும் எனவும் ஆனால் வரவிருக்கும் நிதியாண்டில் ஒரு குறுகிய காலத்திற்கு அதிக அளவிலான தயார்நிலையை பிரதிபலிக்கும் வகையில் நவுறு பரிசீலனை மையம் பேணப்படும் எனவும் Stephanie Foster கூறினார்.
பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்புமையம் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு அது மூடப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு கடல் கடந்த செயலாக்க மையமாக நவுறு மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
