திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு விருந்தினர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர், இருபத்து ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Hunter Valley பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ள காவல்துறையினர் மற்றும் அவசர சேவைப்பிரிவினர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தடம்புரண்டு கவிழ்ந்து கிடக்கும் பேருந்துக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Wandin Estate wineryயில் இடம்பெற்ற திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, Greta அருகே உள்ள Wine Country Drive சுற்று வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாதையிலிருந்து விலகி புரண்டு பள்ளத்திற்குள் விழுந்ததால் இந்தப் பேரவலம் இடம்பெற்றிருப்பதாக சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள காவல்துறையினர் கூறுகிறார்கள். பேருந்தில் சிறுவர்கள் யாரும் பயணம் செய்திருக்கவில்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளார்கள்.
காயமடைந்தவர்கள் பலர் தரை வழியாகவும் வான் வழியாகவும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். 58 வயதான பேருந்து ஓட்டுனர் காயங்களுடன் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெருமளவிலான அவசர சேவைப்பிரிவினர் Wine Country Drive பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். பிரதமர் Anthony Albanese சம்பவம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
