SKIP TO MAIN CONTENT

சிட்னியில் மற்றுமொருவருக்கு கோவிட் தொற்று! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!!

சிட்னியில் சமூகப் பரவல் ஊடாக மற்றுமொருவருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference in Sydney on Thursday, 6 May, 2021.
NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference in Sydney on Thursday, 6 May, 2021. Source: AAP

2 min read

Published

By Renuka


Skip to article content

Highlights

  • சிட்னியின் கிழக்கு பகுதியில் சமூகப் பரவல் ஊடாக மற்றுமொருவருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • தொற்றுக்குள்ளானவர் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் மனைவியாவார்.
  • சிட்னி பெருநகரம் முழுவதும் கோவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சிட்னியின் கிழக்கு பகுதியில் சமூகப் பரவல் ஊடாக நேற்று கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரது மனைவிக்கும் இன்று கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதை அடுத்து, இன்று மாலை ஐந்து மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமைவரை Wollongong, Central Coast  மற்றும்  Blue Mountains உள்ளிட்ட சிட்னி பெருநகரப்பகுதிகளுக்கு சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை நியூ சவுத் வேல்ஸ் மாநில Premier Gladys Berejiklian அறிவித்திருக்கிறார்.

இதன்படி, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மற்றும் உள்ளக அரங்குகளில் முகக்கவசம் அணியவேண்டும்.

உணவகங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்குள் நின்றபடி மது அருந்துவது, உள்ளரங்குகளில் பார்வையாளர்கள் இசை நிகழ்ச்சிகளில் பாடுவது மற்றும் வணக்கத்தலங்களில் கூட்டமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவது, முதியோர் இல்லத்துக்கு இரண்டுபேருக்கு கூடுதலாக  பார்வையிடச் செல்வது, உள்ளரங்குகளில் நடனமாடுவது ஆகியவற்றுக்கும் திங்கட்கிழமை வரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கான பயணங்கள் எதுவும் தடை செய்யப்படவில்லை.

மாநிலத்தின் இயல்புவாழ்க்கைக்கு பாரிய அளவில் பங்கம் ஏற்படுத்தும் வகையிலான எந்த கட்டுப்பாடுகளையும் அறிவிக்கவில்லை, ஆனால், வீடுகளில் இருபது பேருக்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு திங்கட்கிழமைவரை அனுமதியில்லை என்றும் Premier Gladys Berejiklian தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ளநிலையில் மேற்படி கட்டுப்பாடுகளை பொறுப்புடன் பின்பற்றுமாறும் அவர் அனைத்து மக்களையும் கேட்டிருக்கிறார்.

இதேவேளை - நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்கான எல்லையை மூடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் கோவிட் செறிவான சிவப்பு பிரதேசங்களிலிருந்து குயின்ஸ்லாந்துக்கு வருபவர்கள், நாளை முதல் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்று அறிவித்திருக்கிறார்.

இதேவேளை, சிட்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிட் தொற்று, அண்மையில் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தவரிலிருந்து தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்காவிலிருந்து வந்தவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுவிட்ட நிலையில், அவரிடமிருந்து சிட்னியின் கிழக்கு பகுதியிலுள்ளவருக்கு எவ்வாறு தொற்று கடத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து தங்களால் இன்னமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் நியூ சவுத் வேல்ஸ் தலைமை மருத்துவ அதிகாரி Kerry Chant தெரிவித்திருக்கிறார்.

இடையில் இன்னொருவர் இந்தத் தொற்றினைக் கடத்தியிருப்பதற்கான முழுச்சாத்தியமுள்ளது என்றும் அதனை நோக்கிய தமது விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now