SKIP TO MAIN CONTENT

பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குமாறு 9 மருத்துவ அமைப்புகள் இணைந்து வலியுறுத்தல்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன.

Tharnicaa and her older sister Kopika in hospital on Christmas Island before her medical evacuation.
Tharnicaa and her older sister Kopika in hospital on Christmas Island before her medical evacuation. Source: Supplied

4 min read

Published

Updated


Skip to article content

Highlights

  • பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன.
  • இக்குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார்.
  • குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.

நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன.

நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பிரியா-நடேஸ் குடும்பம் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சூழல் பிள்ளைகளுக்கு ஏற்றதல்ல எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Four-year-old Tharnicaa Murugappan has never celebrated a birthday outside of immigration detention.
Four-year-old Tharnicaa Murugappan has never celebrated a birthday outside of immigration detention. Source: Supplied

இதேவேளை பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் நேற்று அவரது நான்காவது பிறந்ததினமாகும்.

குருதித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தருணிகாவுடன் தாயார் பிரியா மட்டுமே பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும் சகோதரியும் கிறிஸ்மஸ் தீவிலேயே உள்ளனர்.

இந்தப்பின்னணியில் தருணிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன.

இக்குடும்பம் தொடர்பிலான இறுதிமுடிவை குடிவரவு அமைச்சர் Alex Hawke விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்தகுடும்பம் தடுப்புமுகாமுக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர் வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதிக்குப் பொறுப்பான Nationals நாடாளுமன்ற உறுப்பினர் Ken O’Dowd இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு குடிவரவு அமைச்சர் Alex Hawke-இடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Placards are seen during a vigil in support of the Tamil family, in Sydney on 5 March, 2021.
Placards are seen during a vigil in support of the Tamil family, in Sydney on 5 March, 2021. Source: AAP

அதேபோன்று லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் Trent Zimmerman-உம் குடிவரவு அமைச்சர் Alex Hawke-ஐத் தொடர்புகொண்டு இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிப்பதற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக ABC-இடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர மேலும் பல அரசியல்வாதிகளும் முக்கிய பிரதிநிதிகளும் இக்குடும்பத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர்.

ஆனால் மீண்டும் படகுகள் வருவதற்கு வழியேற்படுத்திக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ள Acting பிரதமர் Michael McCormack, அகதிகள் படகுகள் கடலில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் Trent Zimmerman நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கவில்லை எனவும் அந்த வலி தனக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுஒருபுறமிருக்க பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்திருந்தபோதிலும் இக்குடும்பம் அதற்கு தகுதிபெறவில்லை என்பதால் மூன்றாவது நாடொன்றில் இவர்கள் குடியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என உள்துறை அமைச்சர் Karen Andrews மறுத்திருந்தார்.

பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

Tamil family
Priya and Nades Murugappan and daughters Tharunicaa, four, and Kopika, six Source: Twitter

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

Kopkia and Tharunicaa in Melbourne detention (left) and recently on Christmas Island (right).
Kopkia and Tharunicaa in Melbourne detention (left) and recently on Christmas Island (right). Source: Supplied

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now