ஆஸ்திரேலிய பெற்றோர் விசாக்களுக்காகக் காத்திருக்கும் 140,000 பேர்!

visa

Source: Getty / Getty images

இந்தியாவில் இருந்து தாக்கல்செய்யப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உட்பட, கிட்டத்தட்ட 140,000 பெற்றோர் விசா விண்ணப்பங்கள் உள்துறை அமைச்சினால் பரிசீலிக்கப்படுவதற்காக காத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடிவரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் விசாக்கள் வரம்பிடப்படுகின்ற பின்னணியில், பெற்றோர் விசாக்களுக்கான தேவை தொடர்ந்து வலுவாக உள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமான இடங்கள் தேவைப்படுகின்றன.

இதன் காரணமாக பெற்றோர் விசாக்களுக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டமிடல் நிலைகள் மற்றும் 31 டிசம்பர் 2022 நிலவரப்படி, உள்துறை அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், புதிய Parent and Aged Parent விசா விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக்காலம் குறைந்தது 29 ஆண்டுகள் எனவும் புதிய Contributory Parent விசா விண்ணப்பங்களுக்கான பரிசீலனைக் காலம் குறைந்தது 12 ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பெற்றோர் விசா விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக அவற்றின் பரிசீலனைக் காலமும் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு கூறுகிறது.

பெற்றோர் விசாவுக்கென ஒதுக்கப்படும் இடங்கள் 2021-22 ஆம் ஆண்டில் 4,500 ஆக காணப்பட்ட நிலையில் இதனை 2022-23 ஆம் ஆண்டில் 8,500 ஆக

அதிகரிப்பதாக அக்டோபர் 2022 நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவித்ததாக உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பெற்றோர் விசாவுக்கென வருடந்தோறும் ஒதுக்கப்படும் இடங்களை 20,000 ஆக அதிகரிக்கக் கோரி ஒரு புதிய கையெழுத்துவேட்டை நடத்தப்படுகிறது.

இதேவேளை பிள்ளைகள் தங்கள் பெற்றோரை ஆஸ்திரேலியா அழைத்து வருவதற்கு subclass 870 என்ற தற்காலிக பெற்றோர் விசா உள்ளபோதிலும், அந்த விசாவில் வருபவர்களுக்கு இலவச மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காது.

குறித்த விசா பெற்றோர்கள் இங்கே மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கிறது.

தற்போது, subclass 870 விசாவிற்கான காத்திருப்பு காலம் ஐந்து மாதங்களாக காணப்படும் அதேநேரம் இதற்கு balance of family test தேவையில்லை.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

Updated

Source: SBS


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now