Highlights
- மெல்பனிலிருந்து குயின்ஸ்லாந்து சென்ற பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- மெல்பனில் முடக்கநிலை நடைமுறையிலிருந்த போது குறித்த பெண் தனது கணவனுடன் நியூசவுத் வேல்ஸ் வழியாக பயணம் செய்துள்ளார்.
- தொற்று இனங்காணப்பட்ட பெண் குயின்ஸ்லாந்தின் பல இடங்களுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெல்பனில் ஏற்பட்டுள்ள சமூகப்பரவல் காரணமாக கடந்த மே 28ம் திகதி முதல் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இந்தப்பின்னணியில் மெல்பனிலிருந்து ஜுன் 1ம் திகதி புறப்பட்ட 44 வயதுப் பெண்ணும் அவரது கணவரும் நியூசவுத் வேல்ஸ் வழியாகப்பயணித்து ஜுன் 5ம் திகதி குயின்ஸ்லாந்து எல்லைக்குள் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து குறித்த தம்பதியர் Sunshine Coast உட்பட குயின்ஸ்லாந்தின் பல இடங்களுக்கு பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குயின்ஸ்லாந்தின் Caloundra பகுதியிலுள்ள குடும்பத்தினருடன் இவர்கள் இருவரும் தங்கியுள்ள நிலையில் குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் கோவிட் சோதனை மேற்கொள்ளப்பட்டு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டதாக குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் Yvette D'Ath தெரிவித்தார்.
இதேவேளை கோவிட் தொற்றுடன் குறித்த பெண் சென்றுவந்த இடங்களின் பட்டியலை தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறையினர், இந்த இடங்களுக்குச் சென்றவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் அதேநேரம் கோவிட் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுஒருபுறமிருக்க குறித்த தம்பதியர் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலும் கணிசமான நேரத்தைச் செலவிட்டுள்ளதால் அங்கு அவர்கள் சென்ற இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறையினர் குறித்த இடங்களுக்குச் சென்றவர்களுக்கு கோவிட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்கள் இவரும் எதற்காக மற்றும் எப்படி பயணக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விக்டோரியாவிலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் நுழைந்தார்கள் என்ற விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் Steve Gollschewski தெரிவித்தார்.
READ MORE

COVID-19 ஒரு உயிரியல் ஆயுதமா?
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share

