38 வயதான ராஜ்விந்தர் சிங், டெல்லியின் திகார் சிறையிலிருந்து ஏழு பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புடன் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டார்.
கடந்த அக்டோபர் 2018 இல் Cairns-க்கு வடக்கே Toyah Cordingley என்ற 24 வயதுப்பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Toyah Cordingleyயின் மரணத்துடன் தொடர்டையதாக சந்தேகிக்கப்பட்ட ராஜ்விந்தர் சிங், சம்பவம் இடம்பெற்ற அடுத்தநாளே தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு இந்தியாவின் வடக்கு பஞ்சாப் பகுதிக்குச் சென்றதையடுத்து, அவரைத் தேடும்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
குயின்ஸ்லாந்தின் Innisfail பகுதியில் வாழ்ந்துவந்த ராஜ்விந்தர் சிங் அங்கு ஒரு செவிலியராக பணிந்துள்ளதாக கூறப்படுகிறது.
4 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்துவந்த ராஜ்விந்தர் சிங்கைக் கண்டுபிடிக்க முடியாமலிருப்பது ஒருபுறமிருக்க, இக்கொலை எப்படி நடந்தது ஏன் நடந்தது என்ற எந்த விவரங்களுமே தெரியவராத சூழலில், ராஜ்விந்தர் சிங் எங்கே இருக்கிறார் என்ற தகவலைத் தருபவர்களுக்கு சுமார் 1 மில்லியன் டொலர்கள் பரிசு வழங்கப்படும் என குயின்ஸ்லாந்து பொலிஸார் அறிவித்திருந்தனர்.
குயின்ஸ்லாந்தின் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய சன்மானத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தமை இதுவே முதல்முறையாகும்.
இதையடுத்து சுமார் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்துவந்த ராஜ்விந்தர் சிங் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தமது அன்பு மகள் இறந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியில் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைக்க வேண்டுமென Toyah வின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
