Highlights
- தனது சொந்த நாட்டு குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் Michael Slater விமர்சித்துள்ளார்.
- இந்தியாவில் நிர்க்கதியாகியுள்ள ஆஸ்திரேலியர்களை உடனடியாக அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு Australian Medical Association அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
- குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர் இப்பயணத்தடை மிக அவசியமான ஒன்று எனவும் இதை நடைமுறைப்படுத்தியது சரியானதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்தையடுத்து அங்கிருந்து எவரும் ஆஸ்திரேலியா வரமுடியாதபடி விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்த வாதபிரதிவாதங்கள் தொடர்கின்றன.
இப்பயணத்தடை இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மீண்டும் மறுத்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இப்பயணத்தடை மிக அவசியமான ஒன்று எனவும் இதை நடைமுறைப்படுத்தியது சரியானதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு சுமார் 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் காத்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்பயணத்தடை காரணமாக IPL போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்ற கிரிக்கட் வீரர்கள் பலரும் நாடுதிரும்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது சொந்த நாட்டு குடிமக்களுக்கு எதிராக அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் Michael Slater, பிரதமரை நோக்கி 'Blood on your hands' என்பதாக சாடியுள்ளார்.
அதேநேரம் இந்தியாவில் நிர்க்கதியாகியுள்ள ஆஸ்திரேலியர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி Australian Medical Association அமைப்பு பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் முன்பு கோவிட் பரவல் செறிவடைந்திருந்தபோது - அங்கு சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களை நோக்கி ஆஸ்திரேலிய அரசு இவ்வளவு கடுமையான அறிவிப்பை விடுத்திருக்கவில்லை எனவும், தற்போது இந்தியர்களுக்கு எதிராக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு இனவாதம் நிறைந்தது எனவும் ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய சமூகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை சரியானதே எனத் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இத்தடை மே 15ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் இது தொடர்ச்சியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த முடிவினை அவ்வளவு இலகுவாக எடுக்கவில்லை எனவும் ஆஸ்திரேலிய பொது சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பயணத்தடையை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழுள்ள அதிகாரத்தின்படி ஐந்து வருட சிறை அல்லது 66,600 டொலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share



