SKIP TO MAIN CONTENT

கட்டாயத் திருமண வழக்கு: வரலாற்றுத் தீர்ப்பை நோக்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம்!

AFP
Source: AFP

3 min read

Published

Updated


Skip to article content

பணத்துக்காக தனது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 45 வயது ஆப்கான் பெண்ணொருவருக்கு எதிரான வழக்கு விசாரணை மெல்பன் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆஸ்திரேலிய நீதிமன்ற வரலாற்றில் கட்டாய திருமண விவகாரத்தில் குற்றவாளியாக இனங்காணப்படும் முதல் நபராக இப்பெண் இருப்பார்.

இந்த விசாரணை முடிவு அடுத்தவருடம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கின் பின்னணி வருமாறு:

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ரகியா ஹைதாரி. இவர்கள் விக்டோரியாவின் Shepparton பகுதியில் வசித்துவந்தார்கள். ரகியா ஹைதாரிக்கு 16 வயதிருக்கும்போது Shepparton பகுதி இளைஞனை குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த நிச்சயதார்த்தத்தினை ரகியா ஹைதாரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கல்வி கற்றுக்கொண்டிருக்கும் தனக்கு திருமணத்தில் இப்போதைக்கு ஈடுபாடில்லை என்று தொடர்ச்சியாக கூறிவந்த காரணத்தினால், அந்த நிச்சயதார்த்தம் குழம்பிப்போனதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், ரகியா ஹைதாரியை அவரது குடும்பத்தினர் பெர்த்திலுள்ள இளைஞனுக்கு திருமணம் செய்துகொடுப்பதற்கு முயற்சித்தபோது, இந்தத் தகவல் பொலீஸை எட்டியது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரகியா ஹைதாரியை பல தடவைகள் சந்தித்துப் பேசிய பொலீஸார், ரகியாவுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்கள். குடும்பத்தின் அழுத்தத்தில் அகப்பட்டிருக்கும் அவரை அதிலிருந்து மீட்கவும் வேறு இடத்தில் தங்கவைப்பதற்கும்கூட ஏற்பாடுகள் செய்வதாக பொலீஸார் உறுதியளித்தார்கள்.

ஆனால் இவையனைத்தையும் மீறி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெர்த்தை சேர்ந்த முஹமட் அலி ஹைமி என்பவருக்கும் ரகியா ஹைதாரிக்கும் விக்டோரியா Shepparton இல் திருமணம் இடம்பெற்றுள்ளது. திருமணத்துக்குப் பின்னர் தனது கணவருடன் பெர்த்திற்குச் சென்ற ரகியா ஹைதாரி, ஆறு வாரங்களில் அவரது கணவரால் கத்தியால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஹைதாரியின் கணவருக்கு 19 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, 15 ஆயிரம் டொலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனது மகளை பலாத்காரமாகத் திருமணம் செய்துகொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ரகியா ஹைதாரியின் தாயாருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இவருக்கு எதிரான வழக்கில், ரகியா ஹைதாரிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்த பெண் மற்றும் ரகியாவின் தோழி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் ரகியாவின் தோழி கூறும்போது - ரகியாவுக்கு முதலாவது நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு, திருமணம் செய்துகொள்வதற்கு ஆர்வமிருக்கவில்லை என்றும் தனது சகோதரிகள் ஏற்கனவே இளம் வயதில் திருமணம் செய்துகொண்டு துயரங்களைச் சந்தித்துவருவதைக் கண்டபிறகு, தானும் அவ்வாறு திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்தார் என்றும் கூறினார்.

திருமணத்தை நிறுத்தும்படி தனது தாயாரிடமும் சகோதரிகளிடமும் கேட்டிருந்தார் என்றும் அதனை அவர்களை மறுத்துவிட்டார்கள் என்றும், தன்னைவிட மிகவும் வயது கூடிய நபரை தான் மணக்கவிரும்பவில்லை என ரகியா கூறினார் என்றும் ரகியாவின் தோழி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஆப்கான் சமூகத்தலைவர் ஒருவரும் சாட்சியத்துக்காக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now