ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளரான ராஜன் இன்று விடுதலைசெய்யப்படுகிறார்.
Leukaemia- புற்றுநோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த ராஜனை, முகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தபின்னணியில், அவர் இன்று விடுதலைசெய்யப்படுகிறார்.
மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு community detention-சமூகத்தடுப்பில் வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தன்னிடம் பேசிய ராஜன் தெரிவித்ததாக, அகதிகள் செயற்பாட்டாளர் திருமதி சாரதா ராமநாதன் SBS தமிழிடம் தெரிவித்தார்.
சமூகத்தடுப்பில் வாழவேண்டுமென்பதால் ராஜனுக்கென வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்குதான் அவர் தங்கவேண்டுமெனவும் திருமதி சாரதா ராமநாதன் குறிப்பிட்டார்.
ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு நவநீதராசா, கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரியிருந்தநிலையில், அவருக்கு 2010ம் ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டபோதும் ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கையையடுத்து அவர் குடிவரவு தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கை மீளப்பெறப்பட்டு, ராஜன் எவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானவர் கிடையாது என தெரிவிக்கப்பட்டபோதும், அப்போது கொண்டுவரப்பட்ட குடிவரவுச்சட்ட மாற்றத்தின்படி அவர் வேறொரு புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படியாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் தீவு, விலவூட், மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாம் என பல தடுப்புமுகாம்களில் வாழ்ந்துவந்த ராஜனுக்கு 2018ம் ஆண்டு புற்றுநோய் தாக்கமிருப்பது கண்டறிப்பட்டதையடுத்து, இவரை விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்ததுடன் பேரணிகளும் கையெழுத்து வேட்டைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தப்பின்னணியில் மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்து இன்றையதினம் விடுதலைசெய்யப்படும் ராஜன், சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்படுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.