சமூக ஆர்வலராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டிராஃபிக் ராமசாமி நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
சிறு வயதில் பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் இவர் கையில் வைத்திருந்த அரிசியைப் பறிமுதல் செய்ததற்கு எதிராக இவர் தொடங்கிய போராட்டத்தின் வெற்றி அவரது பொதுநல வேட்கையைத் தூண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காலப்போக்கில் தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இவர் தொடர்ச்சியாக சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.
ஆரம்பகாலத்தில் சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்ததையடுத்து டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்படலானார்.
ஊர்க்காவல் படையிலும் இவர் சில காலம் பணியாற்றியிருக்கிறார். கல்லூரி படிப்பையே தொடாத இவர் நீதிமன்றங்களில் தானே வழக்கில் வாதாடும் திறமை பெற்றவர்.
2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே.
சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது.
சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரித்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீரக கோளாறு காரணமாகவும் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
