விக்டோரியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்பவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிய மறுத்தால் இருநூறு டொலர் அபராதம் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மே 24 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகிறது.
Highlight
- விக்டோரியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தால் $200 அபராதம் விதிக்கப்படும்.
- பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை பல மாதங்களாக உள்ளபோதும் பலர் இதைப் பின்பற்றுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- அபராதம் விதிக்கும் நடவடிக்கை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.
பொதுப்போக்குவரத்துக்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இலவச முகக்கவசங்களை வழங்குவர் எனவும் அதையும் மீறி உரிய காரணமின்றி முகக்கவசம் அணிய மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியாவாசிகள் பொதுப்போக்குவரத்து சேவைகளில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவிப்பு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளபோதும் கடந்த சில மாதங்களாக ஐம்பது சதவீதமானவர்களே பொதுப்போக்குவரத்து சேவைகளில் முகக்கவசம் அணிவது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டுக்களைப் பார்வையிட்ட பின் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி வீடுதிரும்புபவர்களில் பெரும்பாலானோர் இக்கட்டுப்பாட்டை மீறுவது அதிகரித்துச் செல்வதையடுத்து, இந்த இறுக்கமான கட்டுப்பாடு நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமாதங்களாக நடைமுறையிலுள்ள கட்டுப்பாட்டினை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கென அனைத்து நகர மற்றும் பிராந்திய பொதுப்போக்குவரத்து சேவைகளிலும் மேற்கொள்ளப்படும் இச்சிறப்பு நடவடிக்கையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை எதிர்வரும் ஜூன் ஆறாம் திகதி வரைக்கும் - அதாவது மே 24 முதல் இரண்டு வாரங்களுக்கு நடைமுறையிலிருக்கும் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share



