இந்த வருடம் (2023ஆம் ஆண்டில்) சந்திர புத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் நான்கு கூறுகள் உள்ளன. புத்தாண்டிற்கு முந்தைய வாரம் (அது Little Year என்று அறியப்படுகிறது), நினைவு நாள் மற்றும் பிரார்த்தனைகள், அதைத் தொடர்ந்து புத்தாண்டிற்கு முந்தைய நாள், மற்றும் மீண்டும் ஒன்றிணைதல் கூடவே பரிசு வழங்கும் நாள் (எங்கள் காணும் பொங்கலுக்கு ஒத்தது).
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் “வசந்த விழாவுடன்” தொடங்கி விளக்குத் திருவிழா வரை பதினைந்து நாட்கள் நீடிக்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சீன மற்றும் ஆசிய ஆய்வுகளில் மூத்த விரிவுரையாளர் Dr Pan Wang விளக்குகிறார்.
“சந்திர புத்தாண்டு என்பது சந்திர நாள்காட்டி ஆண்டின் தொடக்கமாகும். சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில், அதை சீன புத்தாண்டு அல்லது வசந்த விழா என்றும் அழைக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
“இது சீனாவில் மட்டுமின்றி, கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற பிற கிழக்காசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது” என்கிறார் Dr Pan Wang.
மலேசியா மற்றும் மங்கோலியாவிலும், உலகெங்கிலும் உள்ள பல புலம்பெயர் மக்களிடையேயும் இந்தப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
Xia அல்லது Shang அரச வம்சத்திலிருந்து தொடங்கி 4,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை சந்திர புத்தாண்டு கொண்டுள்ளது என்று Dr Pan Wang மேலும் கூறுகிறார்.

"தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய கலாச்சாரங்களைப் பற்றி மேலும் அறிய இது ஒரு வாய்ப்பு"
Dr Kai Zhang என்பவர் கான்பராவிலுள்ள Australian National University என்ற பல்கலைக்கழகத்தில் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி பள்ளியில் நவீன சீன மொழி திட்டத்தில் பணிபுரிகிறார்.
உலகெங்கிலுமிருந்து இங்கு குடியேறி வாழும் மக்கள் சீன மற்றும் தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய கலாச்சாரங்களைப் பற்றி அறிய, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
“மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கலாச்சார நிகழ்வு இது. பல குறியீடுகள், அர்த்தங்கள் பொதிந்த, பண்டிகை” என்று அவர் கூறுகிறார்.
சந்திர புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான வழிகள்
சந்திர புத்தாண்டைக் கொண்டாடுவது அலங்கார வேலைப்பாடுகளுடன் ஆரம்பிக்கிறது. புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிடுவது, சிவப்பு உறைகள் (உள்ளே பணம்) மற்றும் பிற பரிசுப் பொருட்களை விநியோகித்தல், பட்டாசுகளை வெடிப்பது மற்றும் டிராகன் நடனம் (dragon dance) பார்ப்பது ஆகியவை அடங்கும்.
“சந்திர புத்தாண்டைக் கொண்டாடுவதில் உணவு (குறிப்பாக மீன் மற்றும் வேகவைத்த dumplings) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் கூடி கொண்டாடப்படுகிறது” என்று Dr Pan Wang விளக்குகிறார்.
"சிவப்பு நிறம் மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. அதனால் தான் நீங்கள் சிவப்பு நிற அலங்காரங்களை அதிகளவில் பார்க்கிறீர்கள். அத்துடன், புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் வளர்ச்சியைக் கொண்டாடுவதற்கும் குழந்தைகளுக்குச் சிவப்பு உறை கொடுப்பது ஒரு பாரம்பரியம்.”

Iris Tang என்பவர் சீனாவில் வளர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாடிற்குக் குடிபெயர்ந்தார்.
“சீனாவில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கும் இங்கு நடக்கும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குமிடையில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், சீனாவில் இதற்கென்று நீண்ட பொது விடுமுறை உள்ளது என்றும் அதன்போது பல் கோடி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வார்கள்” என்கிறார் Iris Tang.
சீனாவைப் போலவே இங்கும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களில் உணவு ஒரு முக்கிய பகுதியாகும் என்கிறார் அவர்.
“தனிப்பட்ட முறையில், நான் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கன்பராவில் ஏராளமான உணவுகளை தயார் செய்து கொண்டாடுகிறேன். நாங்கள் அனைவரும் மேசையைச் சுற்றி அமர்ந்து புத்தாண்டு தினத்தன்று நூற்றுக்கணக்கான dumplingsகளை உருவாக்குகிறோம்.”
சீன பாரம்பரிய நாள்காட்டி
ஆங்கில (Gregorian) நாள்காட்டியை தற்காலத்தில் சீனர்கள் பயன்படுத்தினாலும், பாரம்பரிய சீன நாள்காட்டி சீனாவிலும் புலம்பெயர்ந்து வாழும் சீன மக்களிடையேயும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சந்திர புத்தாண்டு, விளக்குத் திருவிழா மற்றும் Qingming திருவிழா போன்ற பாரம்பரிய விடுமுறைகள் எப்போது என்று அந்த நாள்காட்டி குறிப்பிடுகிறது.
திருமணங்கள், இறுதிச் சடங்குகள், வீடு மாறுதல் அல்லது வணிகத்தைத் தொடங்குவதற்கும் சீன நாள்காட்டி பயன்படுத்தப்படுகிறது என்று Dr Pan Wang விளக்குகிறார்.
சீன பாரம்பரிய நாள்காட்டி, சந்திரன் சூரியன் இரண்டையும் கவனத்தில் கொள்கிறது. பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதை மட்டுமின்றி சூரியனைச் சுற்றும் பூமியின் சுற்றுப்பாதை, இரண்டையும் சீன பாரம்பரிய நாள்காட்டி கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
“இதனால், சீன நாட்காட்டியில், மாதத்தின் ஆரம்பம் எப்போது என்பது சந்திரனால் தீர்மானிக்கப்படுகிறது, ஆண்டின் தொடக்கமானது சூரியனால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே பெரும்பாலான சீன நாள்காட்டிகளில், மாதங்கள் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்" என்று Dr Pan Wang கூறுகிறார்.
பாரம்பரிய சீன நாட்காட்டியில் சில வேறுபாடுகளுடன் கிழக்காசியா முழுவதும் இந்த வகையான நாள்காட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், சந்திர புத்தாண்டு தினம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வரலாம்.
விளக்குத் திருவிழா
பாரம்பரியமாக சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள், புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாளிலிருந்து பதினைந்தாவது நாட்கள் தொடர்ந்து, கடைசி நாளன்று விளக்குத் திருவிழாவில் முடியும் என்று Dr Kai Zhang விளக்குகிறார்.
இதனால் சீன நாள்காட்டியின் முதல் மாதத்தின் பதினைந்தாம் தேதி விளக்குத் திருவிழா நடைபெறுகிறது.
“பாரம்பரியமாக, வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு குடும்பத்தவர்கள் சிறிய விளக்குகளை உருவாக்கி, அவர்கள் தங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே விளக்குகளை ஒளிரச் செய்வார்கள். அதனால்தான், இது விளக்குத் திருவிழா என்று அழைக்கப்படுகிறது”, என்று அவர் கூறுகிறார்.
“நாம் வரலாற்றில் பின்னோக்கிச் செல்ல முடிந்தவரை, Tang வம்சத்தின் ஆரம்பத்தில், பெரியளவிலான நிகழ்வுகள் நடத்தப் பட்டிருக்கின்றன.”
"முன்னோருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரம்"
மெல்பன் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு ஆய்வுகளில் (சீன) மூத்த விரிவுரையாளர் Dr Craig Smith தாய்வான் மற்றும் தென் கொரியாவில் சில வருடங்கள் வசித்திருக்கிறார். அதனால், அந்த இரண்டு இடங்களிலும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கு கொண்ட பசுமை நினைவுகளுடன் அவர் வாழ்கிறார்.
தென் கொரியாவில் சந்திர புத்தாண்டு தினம் ஒருவருடைய முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நேரம் என்று Dr Craig Smith கூறுகிறார். இந்த வழிமுறை மற்றைய பல கலாச்சாரங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்கிறார் அவர்.
“புத்தாண்டு தினத்தன்று, அனைவரும் தங்கள் இறந்த மூதாதையர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள், அவர்களுக்குப் பானங்கள் வழங்குகிறார்கள் அத்துடன் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்” என்று Dr Craig Smith கூறுகிறார்.

"ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறு"
சீனா தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் சந்திரப் புத்தாண்டின் பாரம்பரியக் கொண்டாட்டங்களில் பல கூறுகள் இருப்பதாக Dr Craig Smith கூறுகிறார்.
உதாரணமாக, சந்திர புத்தாண்டு அணிவகுப்புகளின் போது பாரம்பரியமாக ஆடப்படும் சிங்க நடனம் -
“கல்வியாளர்கள் இந்த சிங்க நடனப் பாரம்பரியத்தைப் பார்க்கும் போது, உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறார்கள். மேலும் பல மரபுகள், மதங்கள், இசை, கலை வடிவங்கள் சீனாவிற்குள் வந்ததை நாங்கள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம் - குறிப்பாக புகழ்பெற்ற பட்டுப்பாதை வழியாக - நாங்கள் இப்போது மேற்கு அல்லது மத்திய ஆசிய நாடுகள் என்று அழைக்கும் நாடுகளிலிருந்து வந்துள்ளன” - Dr Craig Smith விளக்குகிறார்.
இந்த பாரம்பரியம் சீனாவிற்கு வெளியே வேர்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் மிக அதிகம். மொழியியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வின் அடிப்படையில் பலர் இதனை பாரசீக மரபுகளுடன் இணைத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு முயலின் ஆண்டு – இந்த சந்திரப் புத்தாண்டு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் வரை நீடிக்கும்.
வியட்நாம் நாட்டில் இந்த ஆண்டு முயல் ஆண்டு இல்லை – அதற்குப் பதிலாக அவர்கள் இந்த சந்திரப் புத்தாண்டை பூனையின் ஆண்டின் ஆரம்பம் என்கிறார்கள்.
12 ஆண்டுகள் என்ற சுழற்சியில் கணக்கிடப்படும் சீன ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு விலங்கினால் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொன்றும், அதன் சொந்த புகழ்பெற்ற பண்புகளுடன் அமைந்துள்ளன. முயல் ஆண்டு, இந்த சுழற்சியில் நான்காவது இடத்திலுள்ளது.
அந்த 12 ஆண்டு சுழற்சி எலியில் தொடங்கி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் என்று இறுதியில் பன்றியில் முடிகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
