AFL என்ற ஆஸ்திரேலியன் ஃபுட்பால் லீக்: தெரிந்ததும் தெரியாததும்

Footy என்ற செல்லமாக அழைக்கப்படுகிற, ஆஸ்திரேலியக் கால்பந்து ஆட்டம் (Australian Football League - AFL ஆட்டத்தின்) 125வது, உச்சக்கட்ட ஃபைனல் ஆட்டம் – இறுதி ஆட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 25ம் தேதி) பெர்த்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவின் விளையாட்டு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் AFL பற்றி நாம் தெரிந்துகொள்வோமே.

AFL

AFL final 2019 Source: Getty Images

AFL ஆட்டத்தை யார் கண்டுபிடித்தது? எங்கு எப்பொழுது ஏன் கண்டுபிடிக்கப்பட்டது? எப்படி வளர்ந்து இன்றைக்கு ஆஸ்திரேலிய பொது மக்களின் மிகவும் பிடித்தமான ஆட்டமாக மாறியது? அதனுடைய சிறப்பம்சங்கள் என்ன? இப்படி எழும் பல கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

AFL ஆட்டம் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியர்கள் கண்டுபிடித்த ஒரே ஆட்டம்
ஆஸ்திரேலியர்கள் கண்டுபிடித்த ஒரே ஆட்டம் இந்த AFL ஆட்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Thomas Wentworth Wills என்கிற (Tom Wills) கிரிக்கெட் வீர் 1858 ம் வருடம் ஜூலை மாதம் 19ம் தேதி தன் கிரிக்கெட் வீரர்களிடம் ஒரு யோசனை சொன்னார். “ குளிர்காலம் வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. ஆனால் எல்லா கிரிக்கெட் வீரர்களையும் அப்படியே விட்டுவிட்டால், அவர்களது உடல் விளையாடத் தகுதியற்று போய் விடும். ஆகவே, ஒரு கால்பந்து மன்றத்தைத் துவங்குவோம். உறுதியான இதயுமும், பலமான கைகளும், ஸ்திரமான கால்களும் இந்தப் பயிற்சியினால் வரக்கூடும். மறுபடி கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்றாற் போலும் இருக்கும். என்ன சொல்கிறீர்கள்? நம்மில் சிலர் கூடி அதற்கான புதிய விதிமுறைகளை எழுதுவோம்.” என்று சக வீரர்களிடம் கேட்டார்.
Coloured photographic portrait of 19th-century Australian sportsman Tom Wills.
Coloured photographic portrait of 19th-century Australian sportsman Tom Wills. Source: Creative Commons
William Hammersley, Tom Smith, James Thompson, மற்றும் Jerry Bryant ஆகியோர், ‘அவர் சொல்வதும் சரிதான். அப்படியே செய்வோம்” என மனமுவந்து Tom Wills - உடன் இணைந்து புதிய கால்பந்தாட்டத்திற்கான  பத்து விதிமுறைகளை, 1859ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி எழுதினர். அவர்கள் மூன்று பக்கங்களில் எழுதிய பத்து விதிமுறைகளின் கையெழுத்துப் பிரதியை, மெல்பர்ன் கிரிக்கெட் குழுவினர், மிக பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

Melbourne Grammar கல்லூரியும் Scotch கல்லூரியும் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, அந்த புதிய வடிவ கால்பந்தாட்டத்தை ஆடினர்.

புதிய கால்பந்தாட்டம் எப்படி வடிவமைக்கப்பட்டது?

புதிய கால்பந்தாட்டத்தின் வடிவம் ஏற்கனவே இருந்த சில விளையாட்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட விதிமுறைகள்தான். ஆனால் அவைகளை மிகவும் உற்சாகம் கொடுக்கக் கூடிய அளவுக்கு பின்னி புதிய வடிவமாக அமைத்தது தான் பாராட்டத்தகுந்தது. Gaelic Football என்கிற ஐரிஷ் விளையாட்டு இரு பக்கமும் 15 விளையாட்டு வீரர்களைக் கொண்டு விளையாடுகிற கால்பந்து. அதில் பந்து வழக்கமாக கால்பந்து உருண்டையாக இருப்பது போல் இருக்கும். ஆனால் அதைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடலாம். உதைக்கலாம். சக வீரர்களிடம் தூக்கி எறியலாம். கடைசியில் வானளாவ உயர்ந்திருக்கிற இரண்டு கோல் போஸ்ட்களுக்கிடையே உள்ள வலைப்பின்னலில் உதைத்துத் தள்ளினால் மூன்று புள்ளிகளும். வலைக்கு மேலே ஆனால் போஸ்ட்டுகளுக்கிடையே உதைத்தால் ஒரு புள்ளியும் உண்டு. இந்த ஐரிஷ் விளையாட்டிலிருந்து சில விதிமுறைகளை எடுத்துக்கொண்டார்கள் என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். Rugby விளையாட்டிருந்தும் சில விதிமுறைகளை எடுத்துக் கொண்டார்கள்.
Isometric field for Australian football, isolated image
Isometric field for Australian football, isolated image in vector Source: iStockphoto
ஆனால் இன்னொரு விடயம் தான் கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலிய பழங்குடியினரின் Marn Grook அல்லது Marngrook  என்கிற கால்பந்து விளையாட்டிலிருந்தும் சில அம்சங்களை எடுத்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.  Woiwurung என்கிற பூர்வீக குடி மக்களின் மொழியில் Marngrook என்றால் பந்து அல்லது விளையாட்டு என்று பொருள். AFL விளையாட்டில் Punt Kicking என்கிற முறை மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, விளையாட்டு வீரர், கையில் பிடித்திருக்கிற பந்தை, தரையில் விழுமாறு கீழே விட்டு, தரையில் விழுவதற்கு முன்பு, தன் காலால் உதைப்பதற்குத் தான் Punt Kicking என்று பெயர். இந்த Punt Kicking  முறையும், தன்னை நோக்கி வருகிற பந்தை கையால் பிடிக்கும் முறையும், மற்றவர்கள் மீதேறி, உயரப் பறக்கும் பந்தை லாவகமாக பிடிக்கும் முறையும், Possum தோலில் செய்த பந்தைக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் விளையாடிய பூர்வீக குடி மக்களின் Marngrook விளையாட்டில் உண்டு.

ஆஸ்திரேலிய கால்பந்து விளையாட்டும் பூர்வீக குடிமக்களும்

Aboriginal domestic scene. The etching was executed by German artist Gustav Mützel, who worked from the sketches of German explorer Johan Wilhelm Theodor Ludwig von Blandowski (see Marn Grook: name of the early australian football game).
The etching was executed by German artist Gustav Mützel, who worked from the sketches of German explorer Johan Wilhelm Theodor Ludwig von Blandowski Source: Creative Commons


Protector of Aborigines எனப் புகழப்படுகிற William Thomas என்பவர் தாம் 1841ம் ஆண்டு வாக்கில் மெல்பர்னின் கிழக்கே இருந்த Wurundjeri பூர்வீக குடி மக்கள், Possum தோலில் செய்த பந்தைக் கொண்டு ஒரு கால்பந்தை விளையாடியதாகவும், வெள்ளையர்கள் விளையாடுவது போல் அல்லாமல், பிடித்த பந்தை கீழேப் போட்டு, அது தரையைத் தொடுவதற்கு முன்பு உதைக்கிறார்கள் எனவும், நான்கு ஐந்து அடி கூட தரையிலிருந்து மேல் எம்பி பந்தைப் பிடித்து விளையாடுகிறார்கள் எனவும், Robert Brough Smyth என்பவர் The Aborigines of Victoria என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Book Cover - Aborigines of Victoria: Volume 1
Book Cover - Aborigines of Victoria: Volume 1 Source: Creative Commons
இன்றைக்கு மிகப் பிரபலமாக இருக்கிற AFL கால்பந்து விளையாட்டில் பூர்வீக குடி மக்களின் விளையாட்டு முறைகள் கலந்திருப்பது, ஆஸ்திரேலிய பண்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது என பூர்வீக குடி மக்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் இன்னொரு தரவையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. விக்டோரிய மாநிலத்தின் மேற்குப்பகுதியில் Lexington என்கிற எஸ்டேட்டில், அதாவது தற்போதைய Moyston பகுதியில், Tom Wills தன் குழந்தைப்பருவத்தில் வளர்ந்த போது, பூர்வீக குடி மக்களின் மொழிகளில் ஒன்றான Djab wurrung என்ற மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக இருந்ததாகவும், அங்கு பூர்வீக குடி மக்களின் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவார் என்றும், அதனால் பின்னாளில் AFL ஆட்டத்திற்கான விதிமுறைகளை எழுதும் போது அதன் தாக்கம் இருந்திருக்கும் என்றும் AFL ஆட்டத்தைப்பற்றிய வரலாறை எழுதிய Col Hutchison 1998ல் குறிப்பிடுகிறார்.

AFL வளர்ந்த கதை

மெல்பர்ன் கால்பந்தாட்டக் குழு 1858ல் துவங்கப்பட்டது. பிறகு 1859ல் ஜிலாங் கால்பந்தாட்டக் குழு துவங்கப்பட்டது. இவை இரண்டு விளையாட்டுக்குழுக்களும், உலகில் உள்ள பழமையான விளையாட்டுக் குழுக்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பிறகு 1860ல் சௌத் ஆஸ்திரேலியாவிலும், 1879ல் குயின்ஸ்லாந்திலும், அதே வருடம் டாஸ்மேனியாவிலும், 1881ல் நியூ சௌத் வேல்ஸிலும், 1885ல் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் என கால்பந்து குழுக்கள் தொடங்கப்பட்டன. பிறகு, 1870களின் வாக்கில், மெல்பர்னில் 10,000த்திற்கும் மேற்பட்ட பார்வையார்களைக் கொண்டு விளையாடப்படுகிற விளையாட்டாக மாறிப்போனது.
A crowd attendance of 27,339 is displayed during the Round 13 AFL match between the West Coast Eagles and GWS Giants at Optus Stadium in Perth, Sunday, August 23, 2020. (AAP Image/Richard Wainwright) NO ARCHIVING, EDITORIAL USE ONLY
A crowd attendance of 27,339 is displayed during the Round 13 AFL match between the West Coast Eagles & GWS Giants at Optus Stadium in Perth, Sunday,Aug 23, '20 Source: AAP / Richard Wainwright
உலகப்போரின் காரணமாக 1916 மற்றும் 1940 வாக்கில் இரண்டாவது உலகப் போருக்காகவும் விளையாட்டுப் போட்டிகள் சற்று நிறுத்தி வைக்கப்பட்டன. இரண்டு நடுவர்கள்  முறையை 1976ம் ஆண்டிலும், விளையாட்டு வீரர்களை மாற்றிக் கொள்கிற முறையை 1978ல் கொண்டு வந்தார்கள்.

அதுவரை VFL என்று விக்டோரியன் ஃபுட்பால் லீக் என்று அழைக்கப்பட்ட கால்பந்து போட்டிகள் 1990ல் தான் AFL, அதாவது ஆஸ்திரேலியன் ஃபுட்பால் லீக் என்று அழைக்கப்பட்டது.  கடைசி கட்ட ஆட்டங்கள், 1957 வாக்கில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டன. ஆனால் அது விளையாட்டரங்கில் கூட்டத்தை குறைப்பதைக் கவனித்த நிர்வாகிகள், 1960ல் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தனர். பிறகு அந்த 1970களில் அந்தத் தடை நீக்கப்பட்டது. தற்போது ஏழு தொலைக்காட்சியினர் நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்.
AFL CEO Gillon McLachlan is seen on a TV screen at the announcement that Brisbane will host the AFL Grand Final during a press conference at the Gabba in Brisbane, Wednesday, September 2, 2020. The AFL have announced that the Gabba will host the Grand Fin
AFL CEO Gillon McLachlan on a TV screen announcing Brisbane will host the AFL Grand Final during a press conference at the Gabba in Brisbane, Wed, Sep 2, 2020. Source: AAP
விதிமுறைகளில் பல மாற்றங்கள் வந்த நிலையில், தற்போதைய வடிவத்திற்கான விளையாட்டு விதிமுறைகள் 2000ம் ஆண்டில் தான் வடிவமைக்கப்பட்டது. முதன் முதலில் குயின்ஸ்லாந்தில் உள்ள அணி 2001ம் ஆண்டு வெற்றிபெற்றது. அதேப்போல நியூ சௌத் வேல்ஸில் உள்ள அணி 2005ம் ஆண்டு வெற்றி பெற்றது.

சில சிறப்பம்சங்கள்

  1. AFL பந்தின் வடிவம் - கையில் பிடித்து ஓட தோதுவாக இருக்கிற பந்து, உதைக்கப்பட்டு கீழே உருளும் போது, எந்த திசையில் உருண்டு எந்தப் பக்கம் போகும் என்று யாராலும் கணிக்க முடியாதவாறு வடிவமைக்கப்பட்டது தான் சிறப்பம்சங்களிலேயே சிறப்பம்சம். அது ஒரு திரில்லர் படம் பார்க்கும் அனுபவத்தை ஆட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் உண்டாக்கும்.
  2. Gordon Coventry என்ற வீரர் 1929ம் வருடம் நடந்த ஒரு விளையாட்டில் 124 கோல்கள் அடித்து ஒரே சீசனில் அதிகம் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
  3. அதிகபட்சமாக 121,696 பார்வையாளர்கள் பங்கெடுத்த ஆட்டமாக 1970ல் Carlton குழுவிற்கும் Collingwood குழுவிற்கும் இடையே நடந்த ஆட்டம் அமைந்தது.
  4. கோவிட் சூழ்நிலை காரணமாக, தற்போது நடைபெற இருக்கிற AFL ஃபைனல் ஆட்டம் தான், விக்டோரியாவை விட்டு வெளியே பெர்த்தில் நடைபெற இருக்கிற இரண்டாவது ஆட்டம். முதல் ஆட்டம் போன வருடம் இதே கோவிட் சூழ்நிலை காரணமாக பிரிஸ்பேனில் நடந்தது.
  5. தற்போது இருக்கிற 18 குழுக்களில் பத்து குழுக்கள் விக்டோரியாவிலும், நியூ சௌத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, சௌத் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் தலா இரண்டு குழுக்களையும் வைத்துள்ளன.
  6. ஒவ்வொரு சீசன் முடிவிலும் 22 சிறந்த விளையாட்டு வீரர்கள், நாடு தழுவிய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
  7. நன்னெறியோடு விளையாடிய வீரருக்கு Brownlow Medalம், அதிக கோல் போட்ட வீரருக்கு Coleman Medalம், சிறப்பாக விளையாடிய 21வயதுக்கு குறைவான இளம் வீரருக்கு Rising Star Awardம், கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு Norm Smith Medalம் கொடுக்கப்படுகிறது.
  8. ஆஸ்திரேலியாவிற்குள்ளேயே விளையாடப்பட்டு வந்த விளையாட்டை, உலக அளவில் அறிமுகப்படுத்தும் வண்ணம், குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் வண்ணம் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடக்கமாக, 2010ம் ஆண்டு அக்டோபரில் மெல்பர்ன் டீமன்ஸ் குழுவும், பிரிஸ்பேன் லயன்ஸ் குழுவும், Shangai-யில் விளையாடின. கிட்டத்தட்ட 7000 பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
தன் குழந்தைப் பருவத்தில், பூர்வீக குடி மக்களின் குழந்தைகளோடு Marngrook விளையாட்டை விளையாடிய Tom Wills,  தனது 14 வது வயதில் இங்கிலாந்தில் உள்ள Rugby School க்குச் சென்று அங்கே Rugby விளையாட்டை கற்றுக் கொண்ட போதே, பள்ளியின் கிரிக்கெட் குழுவிற்கும் கேப்டனாக இருந்தார். விக்டோரியாவிற்கு 1856ம் ஆண்டு திரும்பியவர் இந்த அனுபங்களையெல்லாம் வைத்து இப்படி ஓர் உணர்வு பூர்வமான விளையாட்டை ஆஸ்திரேலியாவிற்கு விட்டுச் சென்றுள்ளார்.

செப்டம்பர் 25ம் தேதி 125 வது AFL சீசனின் கடைசி ஆட்டத்தில் Melbourne Demons -ம் Western Bulldogs -ம், பார்வையாளர்களின் ஆர்ப்பரிப்பின் நடுவே மோதும் போது Tom Wills ஐயும் பூர்வீக குடி மக்களையும் நினைவு கூர்வோம்.
AFL பல்லினக் கலாச்சார விழாவில் பறை ஒலித்தது

AFL பல்லினக் கலாச்சார விழாவில் பறை! அனுமதி இலவசம்!!


ஆய்வுக்குப் பயன்பட்டவை:


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By John B. Parisutham

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand