ஈரானில் செயல்படும், IRGC -Islamic revolutionary guard corps என்ற இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாக ஆஸ்திரேலியா பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஈரானிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வாழும் ஆயிரக்கணக்கான ஈரானிய ஆஸ்திரேலியர்கள் முன்வைத்து வருகிறார்கள். வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் என்பன தொடர்பாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற செனட் குழுவுக்கு, ஈரானில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நூற்றுக்கணக்கான எழுத்து மூலமான கோரிக்கைகளும் சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த செனட் குழுவிலுள்ள, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் Greens கட்சி உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் IRGC- ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை கூடிய விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படை, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு அமைப்பு என்ற வகையில் அதை தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அரசு சேர்க்கவேண்டும் என்ற கருத்தை இந்தக் குழுவிலுள்ள லிபரல் கட்சி செனட்டர் Claire Chandler, GREENS கட்சி செனட்டர் Jordon Steele-John ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள்.

“Tehran, பெண்களின் சுதந்திரம் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பாகவும் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் எடுத்து வரும் அராஜகமான நடவடிக்கைகள் தொடர்பாக, ஈரான் அரசு தண்டிக்கப்பட வேண்டும்; அதற்கு எதிராக மேலும் பல அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல் வேண்டும்’ என்பதே இந்த கோரிக்கைகளின் பின்னணியாகும்.
பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை மறுக்கும் ஈரான் அரசு தண்டிக்கப்பட வேண்டும்
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்கா இந்த அமைப்பை ஏற்கனவே தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்திருக்கிறது. மனித உரிமை மீறல் மற்றும் நாட்டு மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் என்பவற்றில் இந்த அமைப்பு ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதும் தீவிரவாத அமைப்பு என்ற வரைவிலக்கணக்கத்திற்குள் IRGC யின் நடவடிக்கைகள் வரவில்லை என்று இங்குள்ள சில அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் ஈரானிலிருந்து குடிபெயர்ந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் இதற்கான அழுத்தங்களை அரசுக்கு கொடுத்து வருகின்றனர். ஈரானின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வாழும் ஈரானியர்கள் குரல் தரும் போது அவர்களை ஈரான் அச்சுறுத்துவதாக முறைப்பாடுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Ministerial response to petition

மெல்பன் நகரில் வசிக்கும் ஈரானிய ஆஸ்திரேலியரான Hamid என்பவர், இங்கு ஈரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது தொடர்பாக இங்குள்ள ஈரானிய தூதராலய அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களில் மூன்று தடவைகள் தொடர்பு கொண்டு இங்கு ஈரானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர் பங்குபற்றியது தொடர்பாக விசாரித்ததாகத் தெரிவித்திருக்கிறார். ஈரானில் மாணவியாக இருக்கும் அவரது மருமகள் அங்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவரை எச்சரிக்கும் படியும் தூதரக அதிகாரிகள் Hameed க்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் .

பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு ஆஸ்திரேலிய பெண், இங்கு ஈரான் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் அவர் கலந்து கொண்டது பற்றி இங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளிவந்த 5 ஆவது நாள், ஈரானிலுள்ள அவரது 78 வயதான தகப்பனார் அரச கட்டடம் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு அவரது தலையையும் கண்களையும் கட்டி அவரது கால்களின் மீது உதைத்து, இங்குள்ள அவரது மகள் பற்றிய விபரங்களை அவரிடம் கேட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதேபோல அங்குள்ள அப்பாவி உறவினர்கள் தாக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் இங்குள்ள ஈரானிய ஆஸ்திரேலியர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
IRGC எனப்படும் ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படை

ஈரானில் 1979 இல் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சியின் பின்னர் ஈரானிய இராணுவத்தின் ஒரு அங்கமாக அப்போதைய தலைவர் Ruhollah Khomeiniயால் நிறுவப்பட்டதுதான் இந்த IRGC - ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை. இது Sepah அல்லது pasdaran என்றும் அழைக்கப்பட்டது. ஈரானிய இராணுவம் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் பாரம்பரிய ரீதியாக உறுதிசெய்யும் என்றும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை இஸ்லாமிய விழுமியங்களை உறுதி செய்வதோடு ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசு என்ற கட்டுக்கோப்பை பேணும் வகையில் செயல்படும் என்றும் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டது.
ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை இஸ்லாமிய விழுமியங்களை உறுதி செய்வதோடு ஈரான் ஒரு இஸ்லாமிய குடியரசு என்ற கட்டுக்கோப்பைப் பேணும்
வெளி நாடுகளின் தலையீடுகளை முறியடிக்கும் நடவடிக்கைகளையும் traditional military என்ற ஈரானின் இராணுவம் அரசுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டால் அல்லது இஸ்லாமிய புரட்சியின் நோக்கங்களைச் சிதைக்க எத்தனித்தால் அதை அடக்குவதும் இந்த ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் கடமைகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பார்க்கும் போது ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை என்பது ஈரானிய இராணுவத்தை விட வலிமை பொருந்தியது என்றே கொள்ளவேண்டும்.

Major general Hossein Salami இன் கீழ் செயல்படும் இந்த படையில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான (210,000) படை வீரர்களும் சுமார் அறுபதாயிரம் (60,000) paramilitary உறுப்பினர்களும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையில் இருக்கிறார்கள். Ground forces, navy, air force மற்றும் intelligence என்று பல பிரிவுகள் இந்த அமைப்பில் உள்ளன.
ஈரான் -ஈராக் யுத்தம் நடைபெற்ற 1979 தொடக்கம், Lebanese civil யுத்தம் போன்றவற்றில் பெரும்பங்கு வகித்த இந்த ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை, 2005 -2013 காலகட்டத்தில் அதிபர் Mahmoud Ahmadinejad காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பெரும்பங்கு வகித்தது. Mahmoud Ahmadinejad ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி என்ற வகையில் அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சிப் படை பெருஞ் செல்வாக்குடன் விளங்கியது.

பல முன்னாள் புரட்சிப் படை அதிகாரிகள் அரசில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். பல அரசாங்க contracts என்ற ஒப்பந்தங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. பாரிய திட்டங்களை செயல்படுத்த பெருந் தொகையான பணம் கடனாக இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதிபர் Ahmadinejad தேர்தலில் முறை கேடாகத் தெரிவானார் என்பது தொடர்பான 2009 இல் நடைபெற்ற பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை அடக்கியது.
அணு ஆயுத உற்பத்தியில் ஈரான் ஈடு பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து 2010 இல் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் பொருளாதார செயல்பாடுகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடத்தல் வேலைகளிலும் ஈடுபட்டு பணம் திரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் பொருளாதாரம் சிதைவடைந்த நிலையில் புரட்சிப் படையின் நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்பட்டன. பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். தற்போது ஈரான் ஆட்சியாளர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்த நிலையில் மீண்டும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை தனது அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகிறது.

அண்மைக்காலமாக ஈரானில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படைக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம், அனுமதிக்கப்பட்ட ஆடை code ஐ மீறியதாக, அதாவது இஸ்லாமிய சமயத்திற்கு ஏற்புடைய வகையில் ஆடை அணியாத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட Mahsa Amini என்ற 22 வயதான இளம் பெண் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவர் கோமா நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து பெருந் திரளான பொதுமக்கள் வீதியில் குதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டார்கள். குர்திஸ் நகரமான Saqez இல் இரண்டுபேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார்கள். மேலும் பலர் கொல்லப்பட்டதாக Hengaw Human Rights என்ற அமைப்பு தெரிவித்துள்ள போதும் இது உறுதி செய்யப்படவில்லை.
இப்படியான அடக்குமுறை, படுகொலைகளைத் தொடர்ந்து இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவுகளை காரணம் காட்டியும் , கருத்துச் சுதந்திரம் மனித உரிமை என்பன மீறப்பட்டுள்ளமை தொடர்பாகவும் , பெண்களுக்கெதிரான அராஜகம் தொடர்பாகவும் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாகவும், ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு, ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கும் சாத்தியம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை அமைப்பிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் 6 பேருக்கு எதிராக Anthony Albanese தலைமையிலான அரசு தடைகளை விதித்திருக்கிறது. யுக்ரைனுக்கு எதிராக ஈரான் ரஷ்யாவுக்கு drone களை வழங்கியது தொடர்பாகவும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையில் உள்ள உயரதிகாரிகளுக்கு ஆஸ்திரேலியா தடைகளை விதித்திருக்கிறது. இதன் மூலமாக அவர்களது வெளிநாட்டுப் பயணங்கள், விசா பெறும் வசதிகள் என்பன தடுக்கப்படும்; அவர்களது வெளிநாட்டுச் சொத்துக்கள் முடக்கப்படும் என்ற போதும் இது போதுமான அழுத்தத்தை ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படைக்கு ஏற்படுத்தாது என்றே பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஆஸ்திரேலிய சட்டவரைமுறைகளுக்கு அமைய ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் அரசு சேர்க்க இயலாது என்று சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த international law துறையைச் சேர்ந்த பேராசிரியர் Ben Saul கருதுகிறார். ஆனால் அரசு சில சட்ட திருத்தங்கள் செய்து தடையை சாத்தியமாக்கலாம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
