1.கொரோனா வைரஸ் இளம் வயதினரைத் தாக்கினால் எதுவும் நடக்காது. முதியவர்களில் மட்டுமே இது பாதிப்பை ஏற்படுத்தும்.
இது தவறு. இளம் வயதினர் பலரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும்கூட நாம் காண்கிறோம். எனவே இளம் வயதினருக்கு எதுவும் நடக்காது என்ற கூற்று தவறு. கொரோனா வைரஸ் மூலம் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். ஆனால் 65 அல்லது 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஏற்கனவே நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். உதாரணமாக ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், இரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் எளிதாகப் பாதிக்கப்படுவார்கள்.
2.சூரியனிலிருந்து வெளியாகும் UV கதிர்கள் கொரோனா வைரஸை அழிக்கும். எனவே நான் வெயிலுக்குள் நின்றால் கொரோனாவிலிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
UV கதிர்கள் சில வைரஸ்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என சிறியளவிலான ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றபோதும் கொரோனா வைரஸை இதனால் அழிக்க முடியும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எவையும் இல்லை.
3.வெள்ளைப் பூண்டு, மஞ்சள், மூலிகைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும்.

இது தவறான கூற்று. இவற்றின் மூலம் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமாக எந்தச் சான்றும் இல்லை.
4.சுடுநீர், எலுமிச்சை கலந்த நீர் மற்றும் மதுபானம் போன்றவற்றை அருந்துவதால் கொரோனா தொற்றிலிருந்து தப்பலாம்.

இல்லை. சுடுநீர் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் பருகுவதால் உங்கள் தொண்டைவலி குறையக்கூடும். ஆனால் வைரஸை இது கொல்லாது. மதுபானம் அருந்துவதால் கொரோனா வைரஸ் கொல்லப்படாது. மாறாக வேறு நோய்கள் உங்களுக்கு ஏற்படும்.
5.நிறைய நீர் அருந்தினால் கொரோனா வைரஸ் நீருடன் சேர்த்து வயிற்றுக்குள் அனுப்பப்பட்டுவிடும். பின்னர் வயிற்றுக்குள் சுரக்கும் அமிலம் கொரோனா வைரஸைக் கொன்றுவிடும்.
இதனை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒருவரிடமிருந்து வெளியாகும் கழிவுகளில்கூட கொரோனா வைரஸ் இருக்கக்கூடும். இதன் அர்த்தம் வயிற்றுக்குள் சுரக்கும் அமிலத்தால் எல்லாசந்தர்ப்பங்களிலும் கொரோனா வைரஸைக் கொல்லமுடியாது என்பதாகும். ஆனால் ஒருவர் நிறைய நீர் அருந்துவது உடல் நலத்திற்கு மிக அவசியமானது.
6.மலேரியாவுக்கான தடுப்பு மருந்து hydroxychloroquine கோவிட் 19-ஐ குணப்படுத்தும்
இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. hydroxychloroquine கொரோனா வைரஸ் மீது பாதிப்பை ஏற்படுத்துவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளபோதும் மற்றைய ஆய்வு முடிவுகள் இதனை நிராகரிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் hydroxychloroquine மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
7.சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா வைரஸ் போய்விடும்.

சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது பொய். உண்மையில் மிக அதிக சூடான நீரில் குளித்தால் அது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
8.5G மொபைல் வலையமைப்பு கொரோனா வைரஸ் தொற்றை பரப்புகிறது.
கொரோனா வைரஸூக்கும் 5G மொபைல் வலையமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 5G தொழிநுட்பம் இல்லாத பல இடங்களிலும்கொரோனா தொற்று ஏற்படுகிறது.
9.5G கதிர்வீச்சுநோயெதிர்ப்பு சக்தியை குறைவடையச் செய்து கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்தும்.
5G கதிர்வீச்சுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதற்கான சக்தி இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

Source: iStockphoto
10.சுப்பர்மார்கட்டுக்கு செல்லும்போது நான் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடுமா?
நமக்குத் தெரிந்தபடி இந்த வைரஸ் ட்ரொப்ளட்ஸ் எனப்படும் சிறுதுளிகள் மூலம் பரவுகின்றது. ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் இந்த ட்ரொப்ளட்ஸ் வெளியேறி மேற்பரப்புக்களில் தங்கியிருக்கக்கூடும். உதாரணமாக சூப்பர்மார்க்கட்டுகளில் நாம் ட்ரொலி மற்றும் கௌண்டர்களைப் பயன்படுத்தும்போது அந்த மேற்பரப்புக்களில் இந்த ட்ரொப்ளட்ஸ் இருந்தால் அவற்றை நீங்கள் தொடும்போது வைரஸ் உங்களில் தொற்றக்கூடும். இதனால்தான் நமது கைகளை அடிக்கடி சனிடைஸர் பயன்படுத்தி சுத்திகரிப்பது அவசியம். இல்லாவிட்டால் நமது கைகளிலுள்ள கிருமி நாம் மூக்கை அல்லது வாயை அல்லது கண்களைத் தொடும்போது நமது உடலினுள் சென்றுவிடும். நாம் சூப்பர்மார்க்கட்டுக்கு செல்கின்றபோது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது ஆனால் சரியானபடி சுகாதாரத்தைப் பேணினால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
11.கோவிட்-19 தொற்றுள்ள ஒருவர் எனக்கு அப்பாலிருந்து தும்மினால் அதன்மூலம் எனக்கு இவ்வைரஸ் பரவுமா?
கோவிட்-19 தொற்றுள்ள ஒருவர் தும்மும்போது அல்லது இருமும்போது வைரஸ் 8 மீட்டர் தூரம் வரைக்கும் பரவும் என்று ஒரே ஒரு ஆய்வு முடிவு மட்டும் தெரிவித்திருக்கிறது. ஆனால் பொதுவாக 1.5 மீட்டர் சமூக இடைவெளியை மக்கள் பேணும்போது வைரஸ் கிருமிகள் மற்றவரிடமிருந்து பரவும் ஆபத்தைத் தடுக்கலாம்.
12.உயிரற்ற மேற்பரப்புகளிலிருந்து வைரஸைப் பெறுவதற்கான அபாயம் எத்தகையது?
உயிரற்ற மேற்பரப்புகளிலிருந்து வைரஸை பெறுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது. ஆனால் நீங்கள் அந்த மேற்பரப்பைத் தொடுவதற்கு சற்று முன்னர் நோய்த்தொற்றுள்ள ஒருவர் தொட்டிருந்தால் அதில் ஏராளமான வைரஸ் இருக்கலாம். ஆனால் அந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு அதைத் தொட்டிருந்தால், உங்களுக்கு வைரஸ் தொற்றும் ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
13. உயிரற்ற மேற்பரப்புக்களில் வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்? அதேபோன்று கைகளில் எவ்வளவு காலம் இருக்கும்?
வைரஸ் செப்பு உலோகத்தில் நான்கு மணி நேரமும், பேப்பர் அல்லது காட்போர்ட்டில்; 24 மணிநேரமும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக்கில் 72 மணி நேரமும் வாழக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது எவ்வளவு காலம் கைகளில் வாழ்கிறது என்பது பற்றித் தெரியாது.
14. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

•சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
•உங்கள் கைகளை சோப்பு பயன்படுத்தி தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள்.
•இருமும்போதும் தும்மும்போதும் tissue ஒன்றைப் பயன்படுத்திவிட்டு அதனை குப்பைத்தொட்டிககுள் வீசுங்கள். alcohol-based hand sanitiser-ஐ பயன்படுத்துங்கள்.
•உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருங்கள்.
•மற்றவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்.(1.5 மீட்டர் இடைவெளியைப் பேணுங்கள்)