நீங்கள் வரி செலுத்தும் ஆஸ்திரேலிய குடியிருப்பாளராக இருந்தால், நிதியாண்டின் தொடக்கமான ஜூலை 1 முதல், முந்தைய நிதியாண்டில் நீங்கள் சம்பாதித்த அனைத்து வருமானக் கணக்கையும் அறிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில், ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) உங்களுக்கு refund தரப்படவேண்டுமா அல்லது நீங்கள் வரி அலுவலகத்திற்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதா என தீர்மானிக்கும்.
நீங்கள் முதல் முறையாக வரிக் கணக்கை தாக்கல் செய்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் வரி முகவரைப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான நேரம் வரும்போது உங்கள் கடமைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
வரி செலுத்துவோர் தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது எனவும் வரி முகவர் மூலம் அதைச் செய்தால் இன்னும் அதிக அவகாசம் இருக்கும் என்பதையும் நினைவூட்டுகிறார் ATO உதவி ஆணையர் Robert Thomson.

வரி அலவலகத்தால் முன் நிரப்பப்படும் உங்கள் தகவல்களில் நீங்கள் பெற்றுள்ள நலன்புரி கொடுப்பனவுகளும் அடங்கும் என்கிறார் Services Australia சமூக தகவல் அதிகாரி Justin Bott.
நீங்கள் Family Tax Benefit அல்லது குழந்தைப் பராமரிப்பு மானியத்தைப் பெற்றிருந்தால், நிதியாண்டின் இறுதியில் உங்கள் கொடுப்பனவுகள் சரிபார்க்கப்பட்டிருக்கும்.
உங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்த பிறகு, ATO வரி மதிப்பீட்டின் அடிப்படையில், நிதியாண்டின் இறுதியில் உங்களின் உண்மையான வருமானத்துடன் நீங்கள் அறிவித்த வருமான மதிப்பீட்டை ஒப்பிட்டு Services Australia இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளும்.

நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரிபவர் என்றால் அதற்கு ஏற்படும் செலவுகள் மீதான வரி விலக்குகளுக்கான கோரிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.
உங்கள் செலவினங்களைக் கணக்கிடுவதற்கான முறைகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிலையான தொகை (fixed rate method) அல்லது உங்கள் உண்மையான செலவுகள் (actual cost method) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.
எந்த முறையைப் பயன்படுத்தினாலும் அதற்குரிய பதிவுகளை வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்துகிறார் ATO உதவி ஆணையர் Robert Thomson.
ATO Appஇல் உள்ள இலவச பதிவுசெய்தல் கருவியான myDeductions மூலம், உங்கள் பற்றுச்சீட்டுகளின் புகைப்படங்கள் போன்ற செலவுகளின் ஆதாரங்களை பதிவேற்றிவைக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யும் நபர்கள், முந்தைய நிதியாண்டிற்கும் வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டுமா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
இல்லையெனில், அவர்கள் வரி அலுவலகத்திற்கு ஒரு non-lodgement அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
வரிக்கணக்கை இணையவழியாகவோ அல்லது வரிமுகவரைப் பயன்படுத்தியோ தாக்கல்செய்யலாம் எனவும் Tax Clinic, Tax Help program போன்ற உதவித்திட்டங்களும் இருப்பதாகவும் விளக்குகிறார் Robert Thomson.
நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு அரச ஆதரவுடன் இயங்கும் tax clinics திட்டமூடாக உதவிகள் வழங்கப்படுகிறது என விளக்குகிறார் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வரிச் சட்ட இணைப் பேராசிரியராகவும், UNSW Tax and Business Advisory Clinic நிறுவன இயக்குநராகவும் உள்ள Ann Kayis-Kumar.

பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரி முகவர் சேவைகளுக்கு பணம் செலுத்துகின்றனர். உலகளவில் ஆஸ்திரேலியாவின் வரி முகவர்களின் பயன்பாடு இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
குறைந்தபட்சம் $180,000 ஆண்டு வருமானம் இருந்தாலேயொழிய, நீங்கள் வரி முகவரைப் பயன்படுத்துவதால் குறிப்பிடத்தக்க tax refund ஆதாயங்கள் ஏற்படாது என்பதை தமது ஆய்வு நிரூபித்துள்ளதாக பேராசிரியர் Ann Kayis-Kumar சொல்கிறார்.
இருப்பினும், வரி முகவரைப் பயன்படுத்துவதன் மூலம் இலகுவாக வரித்தாக்கல் செய்யப்படும் அதேநேரம் அச்செயற்பாடு தவறாமல் மேற்கொள்ளப்படுவது உறுதியாவதால் வரிமுகவர்களைப் பலர் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஒரு வரி முகவரைப் பயன்படுத்தும் போது, அவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என பேராசிரியர் Ann Kayis-Kumar வலியுறுத்துகிறார்.

வரி அலுவலகத்தின் பெயரால் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
2023 ஆம் ஆண்டில் தனிப்பட்ட தகவல்கலைத் திருடும் நோக்கிலான மோசடிகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் ATO உதவி ஆணையர் Robert Thomson உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்குவதற்கு முன் நன்கு சிந்தித்து செயற்படுமாறு அறிவுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.









