உங்களுக்குப் பிடித்த ஒரு வேலைக்கான விளம்பரத்தைக் காணும்போது அதற்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுமென உந்தப்படுவீர்கள். ஆனால் அதற்கு விண்ணப்பிப்பதற்கான அடுத்த படிகளைப் புரிந்துகொண்டு அதன் பின்னர் விண்ணப்பிப்பது மிகவும் முக்கியமானது.
வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு நேரமும் சக்தியும் தேவைப்படுகின்றன, குறிப்பாக நீங்கள் ஆஸ்திரேலியாவில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கும்போது இதற்கு அதிக முயற்சி தேவைப்படலாம்.
பெரும்பாலான முதலாளிகளுக்கு உங்கள் வேலை வரலாறு மற்றும் திறன்கள் பற்றிய எழுத்துப்பூர்வ ஆதாரம் நீங்கள் ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படுவதற்கு முன்பே தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலிய வேலைச் சந்தைக்கு நீங்கள் புதியவர் என்றால் இந்நாட்டில் வேலை அனுபவம் ஒன்றைப் பெற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்திற்கு நன்மைபயக்கும் என்கிறார் Jobspeak Academyஐச் சேர்ந்த Natalie Peart. அத்துடன் முதல் விண்ணப்பத்திலேயே உங்கள் கனவு வேலையைப் பெற முடியாது எனவும் ஆனால் அதை நோக்கிச் செயல்படுவதற்கான உத்தி உங்களிடம் இருந்தால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் விரும்பிய வேலையைப் பெறமுடியும் எனவும் அவர் சொல்கிறார்.

வேலை விளம்பரங்களைப் பார்க்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த தொழில்துறைக்கு ஏதேனும் சிறப்புத் தேவைகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். முதலாளியைப் பொறுத்து தேவைகள் வேறுபட்டிருக்கலாம் எனக் கூறும் AMES Australia Service Delivery Manager Mandy Ratcliffe, நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையைப் பொறுத்து Police check, Working with Children Check போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம் என்கிறார்.
அடுத்த முக்கியமான படி, நீங்கள் வேலை விளம்பரத்தை முழுமையாகப் படிப்பதை உறுதிசெய்வதாகும். வேலை விவரங்கள் எவை? முதலாளி எதிர்பார்க்கும் பண்புகள் உங்களிடம் உள்ளதா? போன்றவற்றை ஆழ்ந்து சிந்திப்பது அவசியம் என Jobspeak Academyஐச் சேர்ந்த Natalie Peart வலியுறுத்துகிறார்.
உங்களைப் பற்றிய தகவல்களை முதலாளி எழுத்துப்பூர்வமாக எதிர்பார்க்கிறார். எனவே உங்களது CV அதாவது சுய விவரக்கோவையை படிப்பதன் மூலம் அவர் உங்களைப் பற்றி விரைவாக அறிந்துகொள்ள முடியும்.
CV என்பது உங்கள் பணி வரலாறு, கல்வி மற்றும் திறன்களை பட்டியலிடும் இரண்டு அல்லது மூன்று பக்க ஆவணம். அத்துடன் உங்கள் சாதனைகளை முன்னிலைப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும்.
உங்களது CV-ஐ தயாரிக்கும்போது கடுமையான விதிகள் எதையும் பின்பற்றத்தேவையில்லை எனவும் வெவ்வேறு வகைகளாக அதை தயாரிக்கலாம் எனவும் சொல்கிறார் People and Culture professional Ravi Moerman.

CV தயாரிக்கும்போது வேலை விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மொழியைப் பயன்படுத்துவதும் முக்கியம். குறிப்பாக வேலை விவரிப்பில் காணப்படும் முக்கிய வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் குறிப்புகளாக இவை இருக்கலாம்.
அதேநேரம் CVஇல் சேர்க்கக்கூடாத சில விவரங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் புகைப்படம், பிறந்த திகதி போன்றவற்றை சேர்த்துக்கொள்வதை தவிர்க்கலாம் என Ravi Moerman ஆலோசனை சொல்கிறார்.
பெரும்பாலான வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் வயது, மதம், உடல் திறன் அல்லது பாலினம் பற்றி கேட்க முடியாது.
இதேவேளை உங்கள் CV-ஐ தயார் செய்வதற்கு ஏராளமான online ஆதாரங்கள் மற்றும் templates உள்ளன, மேலும் AMES Australia மற்றும் Migrant Resource Centers போன்ற புலம்பெயர்ந்தோர் ஆதரவு சேவைகளும் உங்கள் CV-ஐ உருவாக்க உதவ முடியும்.

முதலாளிகள் அடிக்கடி ஒரு பக்க cover letter கேட்கிறார்கள். இதன் ஊடாக குறித்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களைத் தூண்டியது எது என்பதை விளக்குவதற்கும், நீங்கள் ஏன் அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதைத் தெரிவிக்கவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் பல cover letter-களைப் பார்க்கிறார்கள் என்பதால் உங்களுடைய கடிதம் அவர்களின் ஆர்வத்தைப் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
இதேவேளை தேர்வு அளவுகோல் எனப்படும் கேள்விகளின் பட்டியலுக்கு பதிலளிக்குமாறு முதலாளிகள் உங்களிடம் கேட்பதும் பொதுவானது.
குறித்த வேலைக்கு நீங்கள் பொருத்தமானவர் என்பதை நிரூபிக்க உங்கள் திறமைகள், பண்புக்கூறுகள் மற்றும் அனுபவம் போன்றவற்றை சுருக்கமாக நீங்கள் இங்கு வழங்கலாம்.
எந்தவொரு பதவிக்கும் பொருத்தமானவராக நீங்கள் கருதப்பட வேண்டுமெனில் கோரப்படும் அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்வது அவசியமாகும்.
இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை கவனமாகச் சரி பார்ப்பது மிகவும் முக்கியமானது என AMES Australia Service Delivery Manager Mandy Ratcliffe கூறுகிறார்.

இது ஒருபுறமிருக்க விண்ணப்ப காலக்கெடுவுக்கு முன்னர் அதை அனுப்பிவைக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு பலரும் முயற்சிக்கின்ற பின்னணியில் மிகவும் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே முதலாளியுடனான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். வேலை நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அடுத்த கட்ட தயாரிப்பு முக்கியமானது.
நீங்கள் வேலைக்கான விளம்பரத்தை மீண்டும் படிக்க வேண்டும், ஏனெனில் அதில் பணியமர்த்துபவர் உங்களிடமிருந்து விரும்பும் அனைத்து தகவல்களும் இருக்கும்.
நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் ஒரு நண்பருடன் கேள்வி பதில் முறையில் நீங்கள் பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நேர்காணலும் வித்தியாசமாக இருந்தாலும் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கான உதாரணங்களைக் onlineஇல் காணலாம்.
அதுமட்டுமல்லாமல் நேர்காணலுக்குப் பொருத்தமான ஆடையை அணிந்துசெல்வதும் அவசியம்.
ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் தம்முடன் மேற்கொள்ளப்படும் உண்மையான தகவல்தொடர்புகளை மதிக்கிறார்கள் என Natalie Peart கூறுகிறார்.
நேர்காணல் பதில்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க முயன்று அதில் தவறு விடும் விண்ணப்பதாரர்களை தான் அடிக்கடி காண்பதாக அவர் சொல்கிறார்.
வேலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்கவேண்டிய அனைத்து விடயங்களையும் நீங்கள் சரிவர மேற்கொண்டபின்னரும் சில நேரங்களில் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
உங்கள் விண்ணப்பம் கிடைத்ததை அறிவிப்பது தொடக்கம் அதன் பிந்திய நிலவரம் வரை உங்களுக்கு தகவல்கொடுப்பது, முதலாளிகள் பின்பற்றக்கூடிய சிறந்த நடைமுறையாகும் என்று Ravi Moerman கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








