2019ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முனாம்பாக்கத்தில் இருந்து 243 பேருடன் நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட தேவமாதா படகு காணாமல்போய் ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது.
ஆனால் இன்றுவரை அப்படகுக்கு என்ன நடந்தது அது இடைமறிக்கப்பட்டதா? அல்லது திருப்பியனுப்பப்பட்டதா? அல்லது இடையில் எங்காவது விபத்திற்குள்ளானதா என எவ்வித தகவல்களும் இல்லாமல் மர்மமான ஒன்றாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.
நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட இப்படகில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சொல்லப்படும் நிலையில் படகில் சென்றவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அவர்களது உறவினர்கள் கலங்கிப்போயுள்ளனர்.
குறித்த படகில் பயணம் செய்தவர்களில் 184 பேர் டெல்லியிலிருந்து சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இலங்கையிலிருந்து திருப்பியனுப்பபட்டு 2,3 தலைமுறைகளாக டெல்லியில் வாழ்ந்துவந்தவர்கள் ஆவார்.
படகில் சென்ற ஏனையவர்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
இதேவேளை குறித்த படகில் பயணப்பட்டு வந்தவர்களின் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். 1 வருடமாகியும் படகுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத பின்னணியில் தமது உறவினர்களுக்கு நலமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தாலே போதுமானது எனச் சொல்கிறார் தனது சொந்தங்கள் 10 பேரை இப்படகில் தொலைத்த ஒருவர்.
இப்படகு காணாமல்போன நாள் முதற்கொண்டு தாம் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டும் எந்தப்பயனும் கிடைக்கவில்லை அவர் கூறினார்.
இது தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வரும்நிலையில் பொலிஸார் இவ்விடயத்தில் ஏதோவொன்றை மறைப்பதாகப் படுகிறது என ஆஸ்திரேலியாவில் வாழும் குறித்த நபர் தெரிவித்தார்.
இந்நிலையில் தேவமாதா படகு குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா என கேரள பொலிஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு விசாரணைகள் தொடர்வதாகவும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் சிறப்பு விசாரணைக் குழுவை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுஒருபுறமிருக்க குறித்த படகு காணாமல்போய் ஒரு வருடம் முடிவடைந்துள்ளநிலையில் புதிய தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா என்பது தொடர்பில் பதிலளிக்குமாறு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து எல்லைப் பாதுகாப்பு பிரிவினைரை தொடர்புகொண்டபோதும் அவர்கள் இன்னமும் பதிலளிக்கவில்லை.



