பலருக்கும் ஞாபகம் இருக்கக்கூடும். அமெரிக்காவில் George W Bush அதிபராக இருந்த கால கட்டம். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆந்திகதி, அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுரத்தாக்குதலில், 3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த தாக்குதலின் பின்னணியில், இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான Al Qaeda செயல்பட்டதாக உறுதியானது. அப்போது ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருந்த இஸ்லாமிய அமைப்பான தலிபான், Al Qaeda தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆதரவும் அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிவந்ததோடு, அங்கிருந்து அவர்கள் செயல்படவும் ஒத்துழைப்பு வழங்கிவந்ததாகவும் உறுதியாக நம்பப்பட்டது.

2001இல், ‘War on terrorism’ என்ற பிரகடனத்தை அதிபர் George W Bush செய்ததைத் தொடர்ந்து, முதலில், அமெரிக்கத் துருப்புகள் 1300 பேர் ஆப்கானிஸ்தானில் தரையிறக்கப்பட்டனர்.
இறங்கிய மறுவாரமே தலிபானின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒருவருடத்திற்குள் மேலும் 10000 துருப்புகள் அங்கு குவிக்கப்பட்டன. மேலும் துருப்புகள் அங்கு தேவைப்பட்டபோதும் அமெரிக்க இராணுவம், ஈராக்கில், அதிபர் Saddam Hussein ஐ அகற்றும் முயற்சியிலும் சம காலத்தில் ஈடுபட்டதால், போதுமான துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பமுடியவில்லை. இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு தலிபான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை ஆக்கிரமித்து இதன்வழியாக பாகிஸ்தானில் தமது ஆதரவு நிலைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
நிலைமையைச் சீர்செய்ய மேலும் 35000 துருப்புக்களை அமெரிக்கா அனுப்பவேண்டியேற்பட்டது. இதைத்தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் Barak Obama காலத்தில், அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்தது. தலிபான் அமைப்பை நிர்மூலம் செய்யும் நடவடிக்கைகளிலும் கேந்திர முக்கியத்துவ மிக்க நிலையங்களைப் பாதுகாக்கும் பணியிலும் அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டது.

2011 இல் Obama நிர்வாகம், பாகிஸ்தானில் Abottabad என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த Al Qaeda தலைவரும் செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத்தாக்குதலின் சூத்திரதாரியுமான Osama Bin Laden-ஐத் தேடிக்கண்டுபிடித்துக் கொன்றது.
இதன்பின்பு அமெரிக்க இராணுவமும் NATO படைகளும் படிப்படியாக வெளியேறத்தொடங்கின.
அமெரிக்க துருப்புகள் 2448 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். சுமார் 20000 பேர் படுகாயமடைந்தார்கள். இந்த இராணுவ நடவடிக்கைகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரதேசங்களில் 71000 பொதுமக்கள் உட்பட 241,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவின் பங்கு என்ன?
இரட்டைக்கோபுரத் தாக்குதலைத்தொடர்ந்து அப்போது பதவிலிருந்த அதிபர் George W Bush, ‘War on terror’தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போது இங்கு பதவியிலிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் John Howard, ANZUS ஒப்பந்தத்திற்கு அமைய, ஆஸ்திரேலிய துருப்புக்களை அனுப்ப முன்வந்தார்.

2001 - 2014 காலப்பகுதியில் 26000 ஆஸ்திரேலிய துருப்புகள் ஆப்கானிஸ்தானில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இதுவரை 41 ஆஸ்திரேலிய இராணுவ வீரர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். பலர் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுள் சிலர், அப்பாவி ஆப்கான் பொதுமக்களை கொலைசெய்தார்கள் அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் இங்கு இப்போது நடைபெற்று வருகின்றன.
20 வருடங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் 4 அதிபர்கள் அடுத்தடுத்து பதவிக்கு வந்திருக்கிறார்கள். இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
அதிபர் George W Bush ஐத்தொடர்ந்து 2008 இல் பதவிக்கு வந்த அதிபர் Barak Obama, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை முழுமையாக திருப்பி அழைத்துக்கொள்ளும் உறுதி மொழியுடனேயே பதவிக்கு வந்தார். அவர் பதவியிலிருந்தபோதுதான் 2011 இல் Al Qaeda தலைவர் Osama Bin Laden கொல்லப்பட்டார்.

2014 காலப்பகுதியில் 10000 அமெரிக்கத்துருப்புகள் உட்பட 12500 வெளிநாட்டுத் துருப்புகள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தன. NATO படைகளும் வெளியேறின.பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கைகளிலேயே வெளிநாட்டுத் துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே தலிபான் உட்பட மற்றும் Islamic State தீவிரவாதிகளின் கை, அங்கும் தெற்காசியப் பிராந்தியங்களிலும் மீண்டும் ஓங்கத்தொடங்கியது. 2016இல் பதவிக்கு வந்த Donald Trump அமெரிக்க பொதுமக்களின் பலத்த அதிருப்திக்கு மத்தியில், துருப்புகளை வாபஸ் பெறும் திட்டத்தை இடைநிறுத்தி, மேலும் ஆயிரக்கணக்கான துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார்.
2018 காலப்பகுதியில் ஆப்கான் இராணுவத்திற்கு எதிரான தலிபான் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்தது. செய்வதறியாத அமெரிக்கா, வான்வழித்தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது.
ஆனால் அமெரிக்க துருப்புகள் இன்னும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருப்பது அமெரிக்க பொதுமக்களின் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அமெரிக்கா 2018 இல் தலிபானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் Qatar நாட்டில் Doha வில் இடம்பெற்றன.

2020 வரை தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தைகள் காரணமாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம் தலிபானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே எட்டப்பட்டது. இதன்படி ‘அமெரிக்க இராணுவம் இவ்வருடம் (2021)மே மாதம் முற்றாக வெளியேறும்; அதற்குப் பதிலாக தலிபான், AlQaeda போன்ற தீவிரவாதக்கும்பல்களுக்கு ஆப்கானிஸ்தானில் தஞ்சம் கொடுக்காது என்ற உறுதியைக்கொடுக்கும். அத்தோடு தலிபான் தற்போது பதவியிலிருக்கும் ஆப்கான் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை நடத்தும்’ என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
இவ்வருடம் Joe Biden அதிபராகப் பதவி ஏற்றபோது அங்கு இன்னும் 2500 வெளிநாட்டு துருப்புகள் மட்டுமே இருந்தன. இவ்வருடம் செப்டம்பர் மாதம் 11 ஆந்திகதிக்கு முன் எஞ்சிய துருப்புகளை விலக்கிக் கொள்வது என்ற அடிப்படையில் இப்போது துருப்புகள் வெளியேறிவருகின்றன. இவ்வருடம் ஆகஸ்ட் 31 ஆந்திகதிக்கு முன் அமெரிக்க துருப்புகள் முற்றாக வெளியேறும் என்று அதிபர் Biden இப்போது கூறியிருக்கிறார்.

துருப்புக்கள் என்ன நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா?
‘நாங்கள் எதற்காக ஆப்கானிஸ்தான் சென்றோமோ அதைச்செய்து முடித்திருக்கிறோம். அதாவது 9/11 தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பது, Osama Bin laden க்கு நீதிப்படி தண்டனையை வழங்குவது. இவையிரண்டையும் நாம் செய்து முடித்திருக்கிறோம். நாட்டைக்கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட நாங்கள் அங்கு செல்லவில்லை’ என்று அமெரிக்க அதிபர் Joe Biden தெரிவித்திருக்கிறார்.
2001 இற்குப்பின்பு இரட்டைக்கோபுரத்தாக்குதல் போன்றதொரு தாக்குதல் அமெரிக்காவில் இடம்பெறவில்லை என்பதும் Osama Bin Laden சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டதும் அமெரிக்க இராணுவம் அங்கு அனுப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகியிருப்பதையே கோடிட்டுக்காட்டுவதாக எடுத்துக்கொண்டாலும், தொடர்ந்து தலிபான், நாட்டின் பல பகுதிகளை இப்போது கைப்பற்றி வருவதன் காரணமாக Mission Accomplished ‘மேற்கொண்ட பணி சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது’என்ற திருப்தியை அமெரிக்காவுக்கு அது ஏற்படுத்தியுள்ளதாகக் கூறமுடியாது.

வெகுவிரைவில் தலிபான் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிவிடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்தாலும் ‘தலிபானில் 75000 போராளிகள் மட்டுமே உள்ளார்கள் ; ஆப்கான் இராணுவத்தில் 3லட்சம் துருப்புக்கள் இருக்கின்றன; ஆகவே தலிபான் முழு அதிகாரத்தையும் கைப்பற்றுவது நடக்கக்கூடிய ஒன்று அல்ல’ என்றும் அதிபர் பைடன் தெரிவித்திருக்கிறார். அதிபரின் செய்தி வெளியான சில மணித்தியாலங்களுக்குள் தலிபான் ஈரான் எல்லையிலுள்ள பிரதான நகரமான Islam Kaala வைக் கைப்பற்றியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானிலுள்ள 398 மாவட்டங்களில் 250 மாவட்டங்கள் இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
வெளிநாட்டு துருப்புகள் முழுமையாக வெளியேறினாலும் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதராலயத்தைப் பாதுகாக்கவும், காபுல் விமான நிலையம் மற்றும் பிரதான கேந்திர நிலைகளைப் பாதுகாக்கவும் 650 தொடக்கம் 1000 அமெரிக்கத் துருப்புகள் அங்கு நிலைகொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அமெரிக்க இராணுவத்திற்கு அனுசரணையாக இருந்தவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் முக்கியமானவர்களுக்கு, சுமார் 2500 பேருக்கு, அவர்களின் பாதுகாப்பு கருதி, அமெரிக்காவுக்கு குடியேற விசேட விசா வழங்கப்பட்டுள்ளது . கடந்த 6 வருடங்களில் அவர்களுள் பலர் இங்கு ஆஸ்திரேலியாவிலும் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இப்போது வெளிநாட்டு துருப்புகள் முழுமையாக வெளியேறும் நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ளூர் நிலைமைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அல்லது விளைவுகள் எப்படியிருக்கும்?
2001 இற்கு முன் அதாவது அமெரிக்க இராணுவம் அங்கு செல்வதற்கு முன் இருந்த நிலை மீண்டும் ஏற்படும் என்றே அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது தலிபான் ஆக்கிரமித்து வரும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் இராணுவம் தலிபானை கட்டுபாட்டில் வைத்திருக்கும் என்று அதிபர் Ashraf Ghani தெரிவித்தாலும், ஆப்கான் துருப்புகள் நாட்டைவிட்டு இப்போது வெளியேறி அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல பகுதிகளில் ஆப்கான் இராணுவம் தலிபானிடம் சரணடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலிபான் ஒப்புக்கொண்டபடி அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகளை வைத்துப் பாரக்கும் போது, எதிர்காலத்தில் தலிபானின் கை அங்கு ஓங்கியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
