கடந்த 70 ஆண்டுகளாக ஜுன் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை மகாராணியின் பிறந்த நாள் விடுமுறையாக தேசியளவில் கொண்டாடப்பட்ட நிலையில், இவ்வருடம் முதல் இது மன்னரின் பிறந்தநாளாக மாற்றமடைகின்றது.
இதன்படி இந்த ஆண்டு முதல் Queen’s Birthday பொது விடுமுறையானது King’s Birthday என்று அறியப்படும் - இது குறைந்தபட்சம் அடுத்த இரண்டு தலைமுறை மன்னர்களுக்கும் பொருந்தக்கூடும்.
ஆஸ்திரேலியாவின் அரசியாகவும் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் அரியணை ஏறியதையடுத்து இந்த பெயர் மாற்றம் வந்துள்ளது.
மன்னர் சார்ள்ஸ் நவம்பர் 14, 1948 இல் பிறந்த போதிலும், பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலங்கள் பிரிட்டிஷ் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப ஜூன் இரண்டாவது திங்கட்கிழமையை மன்னரின் பிறந்தநாள் பொது விடுமுறையாகக் கொண்டாடுகின்றன.
தெற்கு ஆஸ்திரேலியா, NSW, விக்டோரியா, டாஸ்மேனியா, ACT மற்றும் Northern Territory ஆகியன இந்த ஆண்டு மன்னர் பிறந்தநாளை ஜூன் 12 அன்று கொண்டாடுகின்றன.
குயின்ஸ்லாந்தில் மன்னரின் பிறந்தநாளையொட்டிய பொது விடுமுறை அக்டோபர் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இது இந்த ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம் ஜூன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை மேற்கு ஆஸ்திரேலியா தினமாக கொண்டாடுவதால், அதன் பொது விடுமுறை நாட்களை விரிவுபடுத்தும் நோக்கில் செப்டம்பர் 25 திங்கள் அன்று மன்னரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
1952 இல் அரியணை ஏறிய மகாராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் இப்பொது விடுமுறையை Queen’s Birthday என்று மட்டுமே அறிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
