NSW மாநிலத்தில் தமது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தும் சர்வதேச ஓட்டுநர்கள் ஜூலை 1 முதல் கடுமையான சாலை விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் ஜூலை 1 முதல் NSW ஓட்டுநர் உரிமத் தேர்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்திவந்த சிலர் 13 demerit புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், அல்லது கடுமையான சாலை விதிமீறல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்தாலும் கூட, தமது உரிமங்களை தக்கவைத்திருக்கக்கூடியதாக இருந்தது.
முந்தைய Perrottet அரசு இந்த சிக்கலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு முயன்றது. ஆனால் ஓட்டுநர் உரிம சோதனைகளை நிர்வகிப்பதில் கோவிட் பரவல் ஏற்படுத்திய பின்னடைவுகளுக்கு மத்தியில் அதனைத் தாமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் இப்போது, மாநில விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு, சில நாடுகளைச் சேர்ந்த தற்காலிக விசா வைத்திருப்பவர்கள்- அதாவது ஆறு மாதங்களாக இங்கு வாழ்ந்துவருபவர்களை - ஆஸ்திரேலியாவிலுள்ள அனைவரும் எதிர்கொள்ளும் அதே knowledge மற்றும் practical சோதனைக்கு உட்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் உள்ளூர்வாசிகளைப் போல அவர்கள் logbook hours நிபந்தனையைப் பின்பற்ற வேண்டியதில்லை.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் அல்லது நேபாளம் போன்ற "அங்கீகரிக்கப்படாத" நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து ஜூலை 1க்குப் பிறகு வரும் வெளிநாட்டினருக்கு இப்புதிய கட்டுப்பாடு பொருந்தும்.
ஜப்பான், சிங்கப்பூர் அல்லது ஜெர்மனி போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் உரிமத்தை NSW ஓட்டுநர் உரிமத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
"புதிய ஏற்பாடுகளின் கீழ், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்களுக்கு NSW இல் தொடர்ந்து வசித்திருந்தால், அவர்கள் தொடர்ந்து வாகனம் ஓட்ட விரும்பினால், தமது ஓட்டுநர் உரிமத்தை NSW உரிமத்திற்கு மாற்ற வேண்டும்" என்று NSWக்கான போக்குவரத்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் வெளிநாட்டு ஓட்டுநர் ஒருவர் 13 demerit புள்ளிகளைப் பெற்றிருந்தால், கடுமையான சாலை விதிமீறல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால், நீதிமன்றத்தால் வாகனம் ஓட்டுவதற்குத் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், வேகம் அல்லது போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான குற்றங்களைச் செய்திருந்தால், அவர் visiting driver சலுகைகளை இழப்பார்.
அவர் NSW இல் மீண்டும் வாகனம் ஓட்ட விரும்பினால், NSW ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
