Highlights
- இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களில் சுமார் 150 பேரை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.
- முதல் இரண்டு விமானங்களில் டார்வினை வந்தடைந்த பயணிகள் அங்குள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இந்தியாவிலிருந்து மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்டோரியாவில் இன்று வியாழனிரவு முதல் மாநிலம் தழுவிய முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சுமார் நூற்று ஐம்பது பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விசேட விமானம் மாலை ஐந்து மணியளவில் மெல்பனை வந்தடைந்திருக்கிறது.
கோவிட் பரவல் காரணமாக ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்தவர்களை அழைத்துவந்த இந்த விசேட விமானம் டில்லியிலிருந்து புறப்பட்டு டார்வின் ஊடாக மெல்பனை வந்தடைந்தது.
மெல்பனை வந்தடைந்த நூற்று ஐம்பது பேரும் கோவிட் சோதனையில் தொற்று அற்றவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும், இவர்கள் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களில் முன்னுரிமை அடிப்படையில் அழைத்துவரவேண்டியவர்களாக மதிப்பீடு செய்யப்பட்டவர்கள் பகுதி பகுதியாக விசேட விமானங்களில் வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு விமானத்தில் பயணிப்பவர்கள் இரு தடவைகள் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு முதல் இரண்டு விமானங்களில் டார்வினை வந்தடைந்த பயணிகள் அங்குள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது விமானம் கடந்த 25 ஆம் திகதி சிட்னியில் தரையிறங்கியிருந்தது.
மாநிலங்களுக்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம், நான்காவது விமானத்தில் வந்துள்ள பயணிகளை விக்டோரியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை, விக்டோரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 7 -நாள் முடக்க நிலையை அடுத்து, உள்ளூர் விமான சேவைகள் பல மெல்பனுக்குரிய நாற்பது சேவைகளை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.