போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது.
சிங்கப்பூரை சேர்ந்த தங்கராஜு சுப்பையா, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட நிலையில், இன்று அவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தலுக்கு மரண தண்டனை விதிப்பதா என, தங்கராஜுவின் மரண தண்டனை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு வலியுறுத்தியிருந்தது.
ஆனால் சிங்கப்பூரை பாதுகாக்கும் பல்நோக்கு அணுகுமுறையில் மரணதண்டனை ஒரு முக்கிய அங்கம் என்று சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. இதன்கீழ் கடந்த ஆண்டு மட்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அறிவுசார் குறைபாடு உடையவரும் ஒருவரும் அடங்குகின்றார்.
மரண தண்டனை குறித்த சிங்கப்பூரின் கடுமையான விதிகளுக்கெதிராக, மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் குரல்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
