இதனால், பெண்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்கும் முயற்சியில், உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து அமைகிறது.
சமூக மையங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற நியமிக்கப்பட்ட பொது இடங்களில் உறிபஞ்சு மற்றும் மாதவிடாய் நாப்கின்கள், பாட்கள் போன்ற தயாரிப்புகளை இலவசமாகப் பெறுவதற்கான திட்டங்களுக்கு ஆதரித்து ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு வாக்களித்தனர்.
“இவை ஆடம்பர பொருட்கள் அல்ல,” என்று அந்த நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. “உண்மையில் அவை இன்றியமையாதவை. இப்படியான பொருட்கள் ஸ்காட்லாந்தில் யாருக்கும் கிடைக்காமல் போகக்கூடாது,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் Monica Lennon வாதிட்டார். ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மூலத்தை முன்வைத்து வாதிட்ட அவர், “நாங்கள் கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம், உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகள் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன” என்று மேலும் கூறினார்.
பெண்களுக்குத் தேவையான சுகாதார தயாரிப்புகளை, பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2018 ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சுகாதாரத் தயாரிப்புகளுக்கு தற்போது 5 சதவீத வரி பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுகிறது. இதனை “டம்பன் வரி” என்று பிரபலமாக மக்கள் அழைக்கிறார்கள். அந்த வரியை நிறுத்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் David Cameron அரசு முயற்சித்தது. ஆனால், அப்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்ததால், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறி அதனை செய்ய முடியவில்லை.
ஐயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, கென்யா, இந்தியா, கொலம்பியா, மலேசியா, நிகரகுவா, ஜமைக்கா, நைஜீரியா, உகாண்டா, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இந்தப் பொருட்களுக்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் இதற்கான வரியை நிறுத்துவதற்கே நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் விவாதங்கள் நடைபெற்றன. இவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்ற சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் துணிவு இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்களேன்?
தொடர்புடைய கட்டுரைகள்/விவரணங்கள்:
