தீங்குயிர்கள் அல்லது பீடை என அழைக்கப்படும் தேவையற்ற விருந்தாளிகள் தொடர்பில் குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக கவலைப்படுவதில்லை.
ஆனால் ஆஸ்திரேலியாவில், குளிர்காலத்தில் உங்கள் வீட்டிற்குள் நுழையக்கூடிய பீடைகள் ஏராளமாக உள்ளன.
இவற்றில் மூட்டைப் பூச்சிகள், எலிகள் பொன்ற கொறித்துண்ணிகள் மற்றும் கறையான்கள் மிகவும் பொதுவானவை. கவனிக்க வேண்டியவற்றின் பட்டியலில் கரப்பான் பூச்சிகளும் உள்ளன.
சிறியளவிலான தொல்லை முதல் உங்கள் சொத்தின் மதிப்பைக் குறைப்பது வரை பரந்த அளவிலான விளைவுகளை தீங்குயிர்கள் ஏற்படுத்தலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

வெப்பம் மற்றும் ஈரப்பதம் போன்ற வாழ்க்கைச் சுழற்சிக்கு உதவும் நிலைமைகளை விரும்புவதால் பெரும்பாலான தீங்குயிர்கள் பொதுவாக ஆண்டின் வெப்பமான மாதங்களில், குறிப்பாக கோடையில் நமது வீடுகளைநோக்கி படையெடுக்கலாம்.
ஆனால் சில வகை நுளம்புகள் அதாவது கொசுக்கள் ஆண்டு முழுவதும் காணப்படலாம் என விளக்குகிறார் பூச்சியியல் நிபுணரும் நியூ சவுத் வேல்ஸ் Health Pathology மற்றும் சிட்னி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் Cameron Webb.
குளிர்ந்த மாதங்களில் வீட்டிற்குள் வரும் நுளம்புகளால் வைரஸ் கிருமிகள் பரவக்கூடிய ஆபத்து குறைவானதாகவே உள்ளது என அவர் மேலும் சொல்கிறார்.
கரப்பான்களும் ஒரு வகை பீடையாகும். குளிர்காலத்தில் ஒரு வீட்டில் இருக்கும் சூடான, ஈரப்பதமான சூழலைப் பயன்படுத்தி உணவு ஆதாரங்களை இவை சுரண்டும்.

உங்கள் வீட்டில் பூச்சிகள் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் நிலைமைகளைக் குறைப்பது கரப்பான் பூச்சிகள் அல்லது பிற பூச்சிகள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்க உதவலாம்.
தேவைப்பட்டால், உங்கள் உள்ளூர் hardware கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் பூச்சிக்கொல்லி தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துமாறும் அல்லது அந்தப்பணியை மேற்கொள்ள ஒரு தொழில்முறை நிபுணரை ஈடுபடுத்துமாறும் Dr Cameron Webb பரிந்துரைக்கிறார்.
குடியிருப்பு மற்றும் வணிக விடுதி அமைப்புகளில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து காணப்படும் பூச்சிகளாக மூட்டைப் பூச்சி -bed bugs காணப்படுவதாக கூறுகிறார் பீடை கட்டுப்பாடு துறையில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் David Gay.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவை பயணங்கள், தங்கும் இடம் அல்லது விருந்தினரிடமிருந்து தெரியாமல் உங்கள் வீட்டிற்குள் கொண்டு வரப்படலாம் எனவும் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவம் கடினம் எனவும் அவர் சொல்கிறார்.

ஆஸ்திரேலியாவின் பல்வேறு காலநிலைகளுக்கேற்ப அதன் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் காணப்படும் தீங்குயிர்களும் பொருந்திப்போகின்றன.
வெப்பமண்டல வடக்குப் பகுதிகளில், வெப்பமான காலநிலை காரணமாக பீடை தொடர்பான பிரச்சனைகள் ஆண்டு முழுவதும் அதிகமாக இருக்கும்.
இதற்கு நேர்மாறாக, நாட்டின் பிற பகுதிகளில் எலிகள், அணில்கள் உள்ளிட்ட கொறித்துண்ணிகள் மிகவும் பொதுவான தீங்குயிர்களில் ஒன்றாகும். குளிர்ந்த காலநிலையில் அவற்றின் செயற்பாடுகள் வீடுகளுக்குள் அதிகரிக்கின்றன என்கிறார் David Gay.
பீடைகளை எதிர்த்துப் போராட ஒரு சிறப்பு வல்லுநரை நீங்கள் அழைக்கும் போது, அவர்கள் பதிவுசெய்யப்பட்டவர்களா என்பதை உறுதி செய்வது முக்கியம்.

Australian Environmental Pest Managers Association (AEPMA) என்பது நகர்ப்புற சூழலில் பணிபுரியும் தொழில்முறை ரீதியான பீடை கட்டுப்பாட்டாளர்களுக்கான உச்ச அமைப்பாகும். அதன் உறுப்பினர்கள் பீடை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமம் மற்றும் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் வீட்டில் எலிப் பிரச்சனை இருப்பதாக மக்கள் கவனிக்கும் போது, அவர்கள் நினைத்ததை விட அவர்களின் வீட்டில் அவை நிறைய இருக்கலாம் எனக் கூறுகிறார் Australian Environmental Pest Managers Association (AEPMA)இன் Rob Boschma.
கொறித்துண்ணிகளின் தொல்லைகளை தடுப்பதற்கு முதலில் அவை வீட்டினுள் நுழைவதற்கு வழிவகுக்கும் காரணிகளை இல்லாதொழிப்பது அவசியமாகும்.
நேரடியான உடல்நலக் கேடு இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு கறையான்கள் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
அவை மரத்தில் காணப்படும் தனிமங்களை உண்கின்றன, எனவே இவற்றின் பரவல் குடியிருப்பில் உள்ள மர கட்டமைப்புகளுக்கு கணிசமான தீங்கு விளைவிக்கும். மேலும் அவை வெப்பமான மற்றும் குளிர்ந்த மாதங்களில் பரவலாக இருக்கும்.

கரையான்கள் கட்டிடங்களுக்குள் நுழையும் போது, அது அந்த இடத்தின் மதிப்பை அழித்து விடும் என்கிறார் Rob Boschma.
கறையான்கள் பொதுவாக நில உரிமையாளரின் பொறுப்பின் கீழ் வரும் பூச்சி பிரச்சினைகளில் ஒன்றாகும் என்றதால் வாடகை வீடுகளில் உள்ளவர்கள் இது தொடர்பில் வீட்டுச் சொந்தக்காரருடன் பேச வேண்டுமென அவர் வலியுறுத்துகிறார்.
Pesticides contain active ingredients that can harm humans and symptoms of pesticide poisoning occur within two days of exposure.
If you have been poisoned by pesticides, or suspect pesticide poisoning you should call the Poisons Information Centre on 13 11 26.
In an emergency call triple zero (000) for an ambulance.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.










