உங்கள் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை என்ன செய்வீர்கள்?
ஆஸ்திரேலியா முழுவதும், e-waste -மின்னணு கழிவுகளை குப்பைக் கிடங்கிற்கு அனுப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன்படி தொலைக்காட்சி, கணினிகள், மொபைல் போன்கள், பேட்டரிகள், ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் மின்சாரத்தின் உதவியுடன் இயங்கும் எதையும் உங்கள் வழக்கமான குப்பைவாளிக்குள் போட முடியாது.
ஆனால் இந்த பொருட்கள் அனைத்தையும் மறுசுழற்சி செய்ய வழிகள் உள்ளன.
உங்களின் தேவையற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பேட்டரிகளை எந்த கட்டணமும் இல்லாமல் அப்புறப்படுத்துவதற்கான தெரிவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஆஸ்திரேலியர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்பதை அவர்கள் உருவாக்கும் மின்னணுக் கழிவுகளின் அளவை வைத்து அறியலாம்.
e-waste என்ற சொல் இனிமேலும் பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்களைக் குறிக்கிறது. இருப்பினும், அபாயகரமான சில பொருட்களைத் தவிர, பழைய மின்னணுப் பொருட்களில் உலோகங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன, அவை சரியான முறையில் மறுசுழற்சி செய்யப்பட்டால் மீண்டும் பயன்படுத்தப்படலாம்.

காலநிலை மாற்றம், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் துறைக்காக தயாரிக்கப்பட்ட மிக சமீபத்திய National Waste Report இன்படி, 2020-2021 காலகட்டத்தில் 531,000 தொன் மின்னணுக் கழிவுகளை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்துள்ளது.
அதாவது ஆஸ்திரேலியர் ஒருவர் 20 கிலோவுக்கு மேல் மின்னணு கழிவுகளை உற்பத்தி செய்வதாக Planet Arkகின் தலைமை நிறைவேற்று அதிகாரி Rebecca Gilling சொல்கிறார்.
மின்னணு கழிவு என்பது toasters முதல் solar panels வரை பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கிய, மற்றும் மின்சாரத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படும் பல பொருட்களாக இருக்கலாம்.
எங்களின் வழக்கமான recycling bin- மறுசுழற்சி குப்பைவாளியில் இவற்றைப் போட முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் கவலைகளுக்கு அப்பால், பாதுகாப்பு காரணங்களும் உள்ளன.
முக்கியமாக குப்பை சேகரிப்பு மையங்களில் தீப்பிடிப்பதற்கு பேட்டரி போன்ற சிறிய பொருள் மட்டுமே போதுமானது.
இந்நிலையில் பேட்டரிக்களை மறுசுழற்சி செய்வதற்கான நியமிக்கப்பட்ட இடங்கள் பெரிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற இடங்களில் உள்ளதாக Rebecca Gilling விளக்குகிறார்.

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் 90 சதவீதமானவை நிலப்பரப்புக்களைச் சென்றடைந்து சுற்றுச்சூழலில் நச்சுப் பொருட்களைக் கசியவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சரியாக அப்புறப்படுத்தப்பட்டால், 95 சதவீத பேட்டரி பாகங்கள் புதிய தயாரிப்புகளாக மறுசுழற்சி செய்யப்படலாம்.
சமூக மறுசுழற்சி மையங்கள் மற்றும் முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை அப்புறப்படுத்தவென பிரத்தியேகமான drop-off மையங்களை நடத்தும் நடவடிக்கையில் மாநில மற்றும் பிராந்திய அதிகாரிகள் தேசிய அரச ஆதரவு திட்டமான B-cycle-உடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.
ஆனால் அனைத்து பேட்டரிகளும் B-cycle மறுசுழற்சி திட்டத்திற்கு தகுதியானவை அல்ல. எடுத்துக்காட்டாக, கார் மற்றும் lithium-ion பேட்டரிகள் போன்றவை வேறுவிதமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
Lithium-ion பேட்டரிகள் பொதுவாக மின்சார பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
Lithium-ion பேட்டரிகள் நாம் கற்பனை செய்வதை விட அதிகமான அன்றாட சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன எனச் சொல்கிறார் RMIT பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை பேராசிரியர் Tianyi Ma.

Lithium-ion பேட்டரிகள் வெடிக்கும் தன்மை கொண்டவை என்பதால் இவற்றால் தீ உண்டாகும் அதிக ஆபத்து உள்ளது.
எனவே இவற்றுக்கென்று பிரத்தியேகமாக உள்ள சேகரிப்பு மையங்களில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.
சேதமடைந்த lithium-ion பேட்டரியைக் கையாள்வது மற்றும் அதை அகற்றுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை என்கிறார் பேராசிரியர் Tianyi Ma.
ஆஸ்திரேலியா முழுவதும், தொலைக்காட்சிகள், கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் போன்ற மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வதற்கான பல திட்டங்கள் உள்ளன.
இந்தத் திட்டங்களின் கீழ், அத்தகைய பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் மறுசுழற்சி திட்டங்களுக்கு நிதியளிக்க வேண்டும்.
National Television and Computer Recycling Schemeஇன் கீழ், உங்கள் பழைய தொலைக்காட்சி மற்றும் கணினியை இலவசமாக மறுசுழற்சி செய்யலாம் என Planet Arkகின் தலைமை நிறைவேற்று அதிகாரி Rebecca Gilling விளக்குகிறார்.

கணினி சாதனங்களைப் பொறுத்தவரை அவற்றை, அடுத்த கட்டத்திற்கு அனுப்புவதற்கு முதல் அந்த சாதனங்களில் இருந்து அனைத்து தரவையும் அகற்றும் நடவடிக்கைகள் இத் திட்டத்தின் கீழ் உள்ளதாக Rebecca Gilling சொல்கிறார்.
அரசு அங்கீகாரம் பெற்ற Mobile Muster திட்டத்தின் கீழ் மறுசுழற்சி செய்யப்படும் மொபைல் போன்களுக்கும் இது பொருந்தும்.
உங்கள் மொபைல் போனை மறுசுழற்சி செய்வதற்கு முதல் அதிலுள்ள தரவை புதிய சாதனத்திற்கு மாற்றுவதை உறுதிசெய்தபின் அந்த தரவுகளை அழித்துவிட வேண்டுமென வலியுறுத்துகிறார் Australian Mobile Telecommunications Associationஇன் தலைமை நிர்வாக அதிகாரி Louise Hyland.

மொபைல் போன் பாகங்கள் மற்றும் தொடர்புடைய சாதனங்களும் இந்த Mobile Muster திட்டத்தின் கீழ் மறுசுழற்சிக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, இது எந்த கட்டணமும் இல்லாமல் drop-off மற்றும் தபால் மூலம் அனுப்புவதற்கான தெரிவுகளையும் வழங்குகிறது.
மொபைல் போன் அதன் பேட்டரியுடன் இருந்தால் அதையும் Mobile Muster திட்டத்தின்கீழ் மறுசுழற்சி செய்யலாம்.
பேட்டரிகள் தனியாக இருந்தால் அவை B-cycle திட்டத்தின் கீழ் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட வேண்டும்.
எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனம் அல்லது வேறு எந்த வகையான வீட்டு உபயோகப் பொருட்களையும், மறுசுழற்சி செய்வதற்கான பொருத்தமான தெரிவையும் உங்கள் அருகிலுள்ள drop-off இடத்தையும் தெரிந்துகொள்ள recyclingnearyou.com.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுமாறு Rebecca Gilling அறிவுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








