ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வருகின்ற பின்னணியில் அவர்களது வானியல் அறிவு நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒன்றாகும்.
பால்வீதி விண்மீன்களின் அதிசயம் முதல் விண்கற்கள் மற்றும் சந்திரனின் வெவ்வேறு கட்டங்கள் வரை - பூர்வீகக் குடிமக்களின் வானியல் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவைப் பற்றி இந்த விவரணத்தின் ஊடாக தெரிந்துகொள்வோம்.
பூர்வீகக் குடிமக்களின் வானியல் என்பது நட்சத்திரங்களைப் பற்றிய ஆழமான அறிவையும் நிலத்துடனான தொடர்புகளையும் குறிக்கிறது. அதாவது நிலத்தில் உள்ள அனைத்தும் வானத்தில் பிரதிபலிக்கிறது என்பதாக இதை அர்த்தப்படுத்தலாம்.

பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களின் கலாச்சாரத்தில் வானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களது வாய்வழி கதைகள், பாடல்கள், விழாக்கள் மற்றும் கலைகள் மூலம் வானத்தைப் பற்றிய அறிவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தியுள்ளனர்.
தனது தாய், பெரியவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளால் பகிரப்பட்ட பால்வீதியின் கதைகளைத் தான் கற்று வளர்ந்ததாகக் கூறுகிறார் சிட்னியில் பிறந்த Gadigal பெண் Aunty Joanne Selfe.
பூர்வீகக் குடிமக்களின் நட்சத்திரங்கள் பற்றிய அறிவு என்பது அந்த மக்கள் தாங்கள் வாழும் உலகம் மற்றும் அதில் உள்ள அவர்களின் பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும் என்கிறார் Aunty Joanne Selfe.
மெல்பன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளியில் கலாச்சார வானியல் இணைப் பேராசிரியராக உள்ள Duane Hamacher, பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களின் வானியல் பற்றிய பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வானத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அர்த்தமும் நோக்கமும் உள்ளது. பருவங்கள், வானிலை முறைகள் மற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நடத்தை போன்ற சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் பயன்படுகின்றன.
வானில் ஏற்படும் மாற்றங்களை வைத்து வளிமண்டலத்தைப் பற்றி பூர்வீகக் குடிமக்களால் எதிர்வுகூற முடியும். குறிப்பாக புயல் வருமா அல்லது பருவங்கள் மாறப் போகிறதா என்று அவர்களால் கணிக்க முடியும் என்கிறார் Duane Hamacher.

ஒவ்வொரு இரவும், நட்சத்திரங்கள் முந்தைய நாளை விட நான்கு நிமிடங்கள் முன்னதாக கிழக்கு வானில் எழுகின்றன. ஒரு வருடத்தில், பூமி சூரியனைச் சுற்றி வரும்போது நட்சத்திரங்கள் ஒரு வட்டத்தைப் பூர்த்திசெய்து அதே இடங்களுக்குத் திரும்புகின்றன.
வான மாற்றத்தின் இந்த சுழற்சி நிலத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒத்துப்போகிறது.
இதேவேளை Emu in the Sky அல்லது Dark Emu என்று அழைக்கப்படும் வானத்தில் உள்ள Emu, பூர்வீகக்குடியின மக்களுக்குப் பிடித்த ஒரு பிரபலமான விண்மீன் தோற்றம். பால்வீதியில் உள்ள இருண்ட திட்டுகளால் உருவாக்கப்படும் Emu வடிவத்தில் அமைந்த தோற்றம் இதுவாகும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு வானில் Dark Emu விண்மீன் தோற்றம் எழத் தொடங்கும் என்கிறார் Duane Hamacher.

முக்கியமான அறிவியல் தகவல்களைப் பதிவு செய்யும் பூர்வீகக்குடிமக்களின் பாரம்பரியக் கதைகளிலும் இந்த வான Emu இடம்பெற்றுள்ளது.
விண்கற்கள் போன்ற நிகழ்வுகளுக்கும் பூர்வீக கலாச்சாரத்தில் அர்த்தமுள்ளது.
வாழ்க்கை, இறப்பு மற்றும் தத்தம் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்வுகள் பயன்படுத்தப்படுவதாக Duane Hamacher விளக்குகிறார்.
பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களுக்கு நட்சத்திரங்களுடனான அவர்களின் தொடர்பு அவர்களின் அடையாளம் மற்றும் உணர்வுகளுடன் கலந்தது. அது அவர்களை இயற்கை மற்றும் அவர்களின் கலாச்சாரத்துடன் இணைக்கிறது. நட்சத்திரங்கள் அவர்களின் நிலம், மரபுகள் மற்றும் சமூகத்துடனான இணைப்பை உணர உதவுகின்றன.

இப்படியாக பூர்வீகக் குடிமக்களின் நட்சத்திரங்களைப் பற்றிய அறிவு கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒரு முழுமையான புரிதல் கட்டமைப்பாக இணைக்கிறது. உலகைப் பார்க்கும் இந்த வழி பூர்வீகக் குடிமக்களின் கலாச்சாரத்திற்கு மிகவும் முக்கியமானது, அவர்களின் கலாச்சாரத்தை உயிருடன் மற்றும் வலுவாக வைத்திருக்கும் அதே வேளையில் ஞானத்தையும் மரபுகளையும் தலைமுறைகள் மூலம் அனுப்ப இது உதவுகிறது.
For further information, visit Australian Indigenous Astronomy and The First Astronomers.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.












