Key Points
- பூர்வீகக் குடிமக்களிடமிருந்து பிரிக்க முடியாத பகுதி அவர்களது நிலமாகும். அது அவர்களின் அடையாளத்தை உருவாக்குகிறது.
- இந்தப் பிணைப்பு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்படுகிறது.
- புனித தலங்களைப் பற்றிய அறிவு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த புரிதலுடன் மட்டுமே ஒருவர் அந்த புனித தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் தங்கள் நிலத்துடன் ஆழ்ந்த ஆன்மீக தொடர்பைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் அடையாளம், உணர்வு மற்றும் வாழ்க்கை முறைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
தன்னைப்பொறுத்தவரை தனது பூர்வீக நிலம் என்பது மதிக்கப்பட வேண்டிய மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதுடன் தன்னிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாகும் என்கிறார் நியூ சவுத் வேல்ஸ் Dharawal தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவையில் பணிபுரியும் Yuin தேசத்தின் Walbanga பெண்மணி Aunty Deidre Martin.
பூர்வீகக் குடிமக்களுக்கும் அவர்களின் நிலத்துக்கும் இடையே உள்ள தொடர்பு நம்பமுடியாத அளவிற்கு ஆழமாக உள்ளது என்கிறார் Aunty Deidre Martin.

இதேகருத்தை ஆமோதிக்கிறார் Northern Territoryயின் Gurindji மற்றும் Alawa-Ngalakan நபரும் Welcome to Country என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரியுமான Desmond Campbell.
தான் யார் என்பதை உணர்த்தும் இடமாகவும் மிகவும் பாதுகாப்பாக உணரக்கூடிய இடமாகவும் தனது பூர்வீக நிலம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
தனது கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், அது வளர்க்கும் ஆழமான ஆன்மீகத் தொடர்பிற்காகவும் தனது பூர்வீக நிலத்திற்கு அடிக்கடி பயணம் செய்வதாகக்கூறும் Desmond Campbell, இந்த இணைப்பு தனது அமைப்பை திறம்பட வழிநடத்த உதவுவதாக சொல்கிறார்.
நிலத்துடனான தனது ஆன்மீக தொடர்பு சிறுவயதில் சொல்லப்பட்ட கதைகளிலிருந்து தொடங்கியதாகவும் அக்கதைகளில் நிலத்தைப் பற்றிய முக்கியமான அறிவூட்டல்களும் பாடங்களும் நிறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Barwon நதியருகில் வசிக்கும் Ngemba, Ualarai, Kooma மற்றும் Kamilaroi மனிதரான Bradley Hardy அந்த நதியே தனது ரத்தம் மற்றும் அடையாளம் என்கிறார்.
Brewarrina Aboriginal Cultural Museum-இல் உள்ளூர் வழிகாட்டியாக பணியாற்றும் Bradley Hardy, தனது நிலத்தின் கதைகள் மற்றும் வரலாறுகளை தொடர்ந்து கூறிவருகிறார். இவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் மூலம் தனது கதைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தனது கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பூர்வீக குடிமக்களின் நிலங்களில் பல புனித தளங்கள் உள்ளன. உதாரணமாக தான் பணிபுரியும் தேசிய பூங்காவில் ஏராளமான புனித தளங்கள் உள்ளதாகவும் அவை பூர்வீக குடிமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் சொல்கிறார் Aunty Deidre Martin.
இத்தகைய இடங்களைப் பார்வையிடும் முன் அவை பற்றிய அறிவைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக ஆண்களுக்கான இடங்கள் மற்றும் பெண்களுக்கான இடங்கள் சில தனித்தனியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த தளங்கள் தொடர்பில் உள்ளூர் பூர்வீகக்குடி சமூகங்களுடன் இணைந்து செயற்படுவது அல்லது உள்ளூர் நில கவுன்சில் ஊடாக அவற்றை ஆராய்ச்சி செய்வது, அவற்றுக்கான மரியாதையை காட்டுவது மட்டுமல்லாமல் பூர்வீகக்குடிமக்களின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பையும் வழங்குகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




















