நாட்டில் ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஆஸ்திரேலியர்கள் வீதிகளில் இறங்கி, முக்கியமான பிரச்சினைகளில் தங்கள் எதிர்க் குரலை எழுப்புகின்றனர்.
ஆர்ப்பாட்டம் பொதுவாக சட்டவிரோதமானது அல்ல என்ற போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிரமான அல்லது சமூக விரோத நடத்தையுடன் சட்டத்தின் எல்லைகளை மீறும்போது அது சிக்கலைத் தோற்றுவிக்கலாம்.
நீங்கள் ஆர்ப்பாட்டமொன்றில் பங்கேற்கிறீர்கள் என்றால், சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்பு நீங்கள் எங்கிருக்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
போராட்டம் நடத்துவதற்கான உரிமை ஆஸ்திரேலியர்களுக்கு உண்டு என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் இந்த உரிமை அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் அரசியலமைப்பின்படி அரசியல் விவகாரங்கள் குறித்து பேச எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறுகிறார் UNSW பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நீதித்துறையில் பேராசிரியராக உள்ள Luke McNamara.

விக்டோரியா, ACT மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற அதிகார வரம்புகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை வெளிப்படையாக அங்கீகரிப்பட்டுள்ளதாகவும் ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை தொடர்பில் குறிப்பிட்ட இடம் எதுவும் இல்லை எனவும் அவர் சொல்கிறார்.
போராட்டம் நடத்துவது குறித்த சட்டங்கள் ஆஸ்திரேலியா முழுவதும் வேறுபடுகின்றன, மேலும் அவை பரந்த மற்றும் தெளிவற்றதாக இருக்கலாம்.
குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில், போராட்டம் நடத்துவது குறித்த வலுவான சட்டங்கள் உள்ளன.
இம்மாநிலங்களில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும், போராட்டத்தின் போது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்காக நீங்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படலாம். உதாரணமாக மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது, உடைமைகளை சேதப்படுத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளாகும்.
நீங்கள் ஒரு போராட்டத்திற்கு செல்லும்போது பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளையும் உங்கள் எதிர்ப்பைப் பற்றிய கலைப் படைப்புகளைகளையும் எடுத்துச் செல்லலாம். ஆனால் ஆயுதமாகக் கருதப்படும் எதையும் கொண்டுசெல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் Amnesty International Campaigner Nikita White.
வீதிகளில் நடைபெறும் பேரணிகளின்போது பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இடையூறுகளை சந்திக்கின்றனர். இது அரசுக்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டுபண்ணுவதால் பேரணிகள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அவர்களைத் தூண்டும்.
போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தால், சில தடைகளையும் குறுக்கீடுகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று நம்புகிறார் பேராசிரியர் Luke McNamara.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் இடையூறு விளைவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒவ்வொரு அதிகார வரம்பும் அபராதங்களை விதிக்கின்றன.
மேலும் ஆஸ்திரேலியா முழுவதும், முக்கிய துறைமுகம், சாலை மற்றும் முக்கியமான வணிக இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அல்லது வேலைக்குச் செல்வதைத் தடுக்கும்வகையிலான நடவடிக்கைகள் போராட்டத்திற்கு எதிரான சட்டங்களுக்கு உட்பட்டவை.
சில தீவிர வழக்குகளில் நீங்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இணைப் பேராசிரியராக உள்ள Dr Sarah Moulds
தெற்கு ஆஸ்திரேலியாவில் பொது இடமொன்றை பயன்படுத்தமுடியாதவாறு தடை ஏற்படுத்தினால் தற்போது மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இது தவிர அத்துமீறி நுழைவது, அவசரசேவைப் பணியாளரைத் தடுத்தல், அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
போராட்டக்காரர்களில் தீவிர சமூக விரோத நடத்தையை வெளிப்படுத்துபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவார்கள் என்று Amnesty International Campaigner Nikita White கூறுகிறார்.

சமீபத்திய ஆண்டுகளில் போராட்டத்திற்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுவருவதாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் Dr Sarah Moulds சுட்டிக்காட்டுகிறார்.
அதனால்தான் ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துவதன் ஒரு முக்கிய பகுதி முறையான அனுமதியைப் பெறுவதாகும்.
வீதிகளில் பேரணியாகச் செல்லுதல் உட்பட பெரிய பொதுக் கூட்டத்திற்கு நீங்கள் திட்டமிட்டால், அனுமதிக்காக காவல்துறை அல்லது உங்கள் உள்ளூர் அரசுக்கு எழுதலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அனுமதி வழங்கப்படும் என Luke McNamara விளக்குகிறார்.
அனுமதிபெற்று நடத்தப்படும் போராட்டம் என்றாலும் அவ்விடத்திற்கு காவல்துறையினர் வரக்கூடும் என Nikita White கூறுகிறார்.
போராடத்தின்போது நீங்கள் கைதுசெய்யப்படும் சந்தர்ப்பம் எழுந்தால், உங்கள் உரிமைகள் மதிக்கப்படுவதை சமூக சட்ட மையங்கள் உறுதிசெய்யும்.
பாரிய குற்றச்செயல்கள் அல்லாது போராட்டம் தொடர்பான சிறிய குற்றச்சாட்டுகளில் சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கப்படுகிறது. இவை பொதுவாக சில நூறு டாலர்களுக்கு மேல் இல்லை என்கிறார் Dr Sarah Moulds.
Human Rights Law Centre, Amnesty International மற்றும் NSW Council for Civil Liberties போன்ற அமைப்புகள் ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டம் தொடர்பான சட்டங்கள் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








