Key Points
- First Fleet கப்பற்படை 1788 ஜனவரி 18 அன்று Botany Bay வந்தடைந்தது, ஜனவரி 26 அன்று அல்ல.
- 1788 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஸ்திரேலியா என்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது, ஜனவரி 26 அன்று அல்ல
- ஜனவரி 26, பூர்வீகக்குடி மக்களுக்கு எதிர்ப்பு மற்றும் உண்மை வெளிப்படுத்தும் நாளாக இருந்து வருகிறது.
Australia Explained என்ற இந்த நிகழ்ச்சியில், ஜனவரி 26-ன் வரலாறு, அது எப்படி அரசு விடுமுறையாக மாறியது, மேலும் ஏன் நாடு முழுவதும் இதை மக்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
SBS-இன் தேசிய பூர்வீகக்குடி விவகார ஆசிரியரும், NITV-யில் ஒளிபரப்பாகும் The Point நிகழ்ச்சியின் இணைத் தொகுப்பாளருமான John-Paul Janke இந்த வரலாற்றுப் பயணத்தை வழிநடத்துகிறார்.
- ஆஸ்திரேலியாவில் ஜனவரி 26 அன்று என்ன நடந்தது?
- First Fleet கப்பற்படை ஜனவரி 26 அன்று வந்தடைந்ததா?
- ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக எப்போது நிறுவப்பட்டது?
- ஆஸ்திரேலியாவில் வந்திறங்கி ஆக்கிரமித்தது பூர்வீகக்குடி மக்களை எவ்வாறு பாதித்தது?
- ஜனவரி 26 ஆஸ்திரேலியா தினமாக எதனால் மாறியது?
- ஆஸ்திரேலியா தினம் Federationயை குறிக்கிறதா?
- ஆஸ்திரேலியா தினம் என்ற பெயர் எப்போது பயன்பாட்டில் வந்தது?
- பூர்வீகக்குடி மக்களுக்கு ஜனவரி 26 துக்க நாளாக இருப்பதன் காரணம் என்ன?
- ஜனவரி 26 தேசிய பொது விடுமுறையாக எப்போது மாறியது?
- ஜனவரி 26 இன்றும் ஏன் முக்கியத்துவம் வாய்த்தது?
ஆஸ்திரேலியாவில் ஜனவரி 26 அன்று என்ன நடந்தது?
ஜனவரி 26 அதிகாலை Captain Arthur Phillip மற்றும் அவரது குழு Sydney Cove பகுதியில் கரை இறங்கினர். Union Jack கொடி நாட்டப்பட்டது. சில கடற்படை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற சிறிய விழா நடைபெற்றது. கைதிகள் கப்பலின் மேல்தளத்திலிருந்து இதைப் பார்த்தனர். இங்கிலாந்தை விட்டு வெளியேறி எட்டு மாதங்களுக்கு மேலாகக் கடந்தபின், முழு கப்பற்படையும் Sydney Cove பகுதியில் நங்கூரமிட்டது.

First Fleet கப்பற்படை ஜனவரி 26 அன்று வந்தடைந்ததா?
இல்லை, 11 கப்பல்களைக் கொண்ட First Fleet கப்பற்படை ஜனவரி 18 அன்று Botany Bayயில் முதலில் வந்ததடைந்தது. புதிய குடிவரவை அமைக்க Botany Bay பொருத்தமற்றது என்று Captain Arthur Phillip கண்டறிந்தார்.
பின்னர், ஜனவரி 23 மாலை Phillip மற்றும் அவரது குழு Botany Bay திரும்பி வந்து, அனைத்து கப்பல்களும் உடனடியாக Port Jackson நோக்கிப் புறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஜனவரி 26 அதிகாலை Phillip மற்றும் அவரது குழு Sydney Cove பகுதியில் கரை இறங்கினர்.
ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக எப்போது நிறுவப்பட்டது?
1788 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று, Arthur Phillip ஆளுநராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், நியூ சவுத் வேல்ஸ் காலனி முறையாக அறிவிக்கப்பட்டது.
அந்த குடியேற்றத்தின் எல்லைகள் 135வது தீர்க்கரேகையிலிருந்து கிழக்கே விரிந்து, முழுக் கண்டத்தின் பாதிக்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியிருந்தன. இந்த எல்லைகள் ஐரோப்பிய ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், அந்த நிலங்கள் ஏற்கனவே பூர்வீகக்குடியின மக்களின் பாரம்பரிய வாழ்விடமாக இருந்தன என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் வந்திறங்கி ஆக்கிரமித்தது பூர்வீகக்குடி மக்களை எவ்வாறு பாதித்தது?
First Fleet சிட்னி வளைகுடா பகுதியில் வாழ்ந்த குறைந்தது 29 பூர்வீகக்குடியின குழுக்களின் பாரம்பரிய நிலங்களில் கரையிறங்கியது. அந்த நிலம் வெற்று நிலமாக இல்லை.
பூர்வீகக்குடி மக்களுக்கு, ஜனவரி 26 என்பது நில இழப்பு, வன்முறை மற்றும் எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்தே உணரப்படுகின்றன.
ஜனவரி 26 ஆஸ்திரேலியா தினமாக எதனால் மாறியது?
1818-இல் ஆளுநர் Lachlan Macquari, ஜனவரி 26-ஐ NSW காலனியில் முதல் கால் பதித்த தினம் அல்லது ஆஸ்திரேலியா என்ற நாடு உருவாகிய தொடக்க நாள் Foundation day என அரசு விடுமுறையாக அறிவித்தார். மற்றைய காலனிகளில் Foundation day வேறு தினங்களில் அப்போது கடைபிடிக்கப்பட்டது.
1918 -இல், Australian Natives Association (ANA) சில கிளைகள் ஜனவரி 26 ஐ ஆஸ்திரேலியா தினமாகக் குறிப்பிட்டன. 1918-க்கு பிறகு, சில மாநிலங்களில் ஜனவரி 26 ‘ஆஸ்திரேலியா தினம்’ என அழைக்கப்பட்டது.
1930-ல் அதிகாரப்பூர்வமாக அந்தப் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1935-க்குள் பெரும்பாலான மாநிலங்கள் இதை ஆஸ்திரேலியா தினமாக அங்கீகரித்தன.
ஆஸ்திரேலியா தினம் Federationயை குறிக்கிறதா?
ஆஸ்திரேலிய காமன்வெல்த் 1901 ஜனவரி 1 அன்று உருவானது. நாடாளுமன்றம் முதன்முதலில் கூடிய நாள் மே 9, 1901 ஆகும்.
இந்த இரு நிகழ்வையும் ஜனவரி 26 குறிக்காது. பதிலாக, 1788 ஆம் ஆண்டு Sydney Cove இல் First Fleet கப்பல் வந்தடைந்ததை நினைவுகூருகிறது.
ஆஸ்திரேலியா தினம் என்ற பெயர் எப்போது பயன்பாட்டில் வந்தது?
தேசிய ஆஸ்திரேலியா தினம் என்ற கருத்து, முதல் உலகப் போரின் போது போருக்காக நிதி திரட்டும் முயற்சிகளின் பகுதியாக தோன்றியது. சில ஆண்டுகள், நிகழ்வுகள் ஜனவரிக்கு பதிலாக ஜூலை மாதத்தில் நடைபெற்றன.
1918 ஆம் ஆண்டிற்கு முன்பு, சில அமைப்புகள் ஜனவரி 26-ஐ ஆஸ்திரேலியா தினமாக குறிப்பிடத் தொடங்கின. 1930 ஆம் ஆண்டில், Australian Natives Association அதிகாரப்பூர்வமாக இந்த பெயரை ஏற்றுக் கொண்டது, மற்றும் 1935 ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான மாநிலங்களும் இதைப் பின்பற்றின. ஆனால் நியூ சவுத் வேல்ஸ் சில ஆண்டுகள் இதனை ஆண்டு நினைவு கூறும் நாள் என்று அழைத்தே வந்தது.
பூர்வீகக்குடி மக்களுக்கு ஜனவரி 26 துக்க நாளாக இருப்பதன் காரணம் என்ன?
1938-ல், Sydney Cove-இல் கால் பதித்த 150வது ஆண்டு நிறைவில், பூர்வீகக்குடியின தலைவர்கள் முதல் துக்க நாள் (Day of Mourning) என்ற போராட்டத்தை நடத்தினர். இது ஆஸ்திரேலியாவின் முதல் பூர்வீகக்குடியின உரிமைப் போராட்டமாகக் கருதப்படுகிறது.
அன்றிலிருந்து, ஜனவரி 26 பல பூர்வீகக்குடியின மக்களுக்கு இழப்பு, கலாச்சார சிதைவு, துன்பம் மற்றும் எதிர்ப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ஜனவரி 26 தேசிய பொது விடுமுறையாக எப்போது மாறியது?
பல தசாப்தங்களாக மாநிலங்களுக்கு இடையே பொது விடுமுறை ஏற்பாடுகள் வேறுபட்டன. சிலர் ஜனவரி 26 அன்றே கொண்டாடினர், மற்றவர்கள் அதற்கு அருகிலுள்ள திங்கட்கிழமை விடுமுறையைக் கடைப்பிடித்தனர்.
1988 இருநூறாவது ஆண்டு நிறைவிற்குப் பிறகு, அனைத்து மாநிலங்களும் படிப்படியாக தங்கள் பொது விடுமுறை நாட்களை சீரமைத்தன. ஜனவரி 26 1994 இல் தேசிய அளவில் பொது விடுமுறையாக மாறியது.

ஜனவரி 26 இன்றும் ஏன் முக்கியத்துவம் வாய்த்தது?
ஜனவரி 26-ன் வரலாறு நீளமானதும், சிக்கலானதும், ஆழமான உணர்வுகளைக் கொண்டதுமாகும். சிலருக்கு இது கொண்டாட்ட நாள்; பூர்வீகக்குடியின மக்களுக்கு இது துயரம், எதிர்ப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் அடையாளம்.
இந்த தேதியின் உண்மையான வரலாற்றை புரிந்து கொள்வதே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
NITV John-Paul Janke உடன் இணைந்து Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த இந்த சிறப்பு Australia Explained விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.








