SKIP TO MAIN CONTENT

பிரிஸ்பேனில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படுகிறது!

பிரிஸ்பேனில் இந்திய துணைத் தூதரகமொன்று திறக்கப்படவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சிட்னியின் Qudos Bank அரங்கில் உரையாற்றும் போது அறிவித்தார். இந்த முடிவை 'காலத்தின் தேவை' என்று குயின்ஸ்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தினர் பாராட்டியுள்ளனர்.

Brisbane

2 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை சிட்னி வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகம், இராஜதந்திரம் மற்றும் கலாச்சாரம் குறித்து ஆஸ்திரேலிய அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

செவ்வாயன்று சிட்னி Qudos Bank அரங்கில் சுமார் 20,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகள் இடையிலான பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் ஒன்று பிரிஸ்பேனில் புதிய இந்திய துணை தூதரகத்தை திறப்பது குறித்த அறிவிப்பாகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உறவு 3Cகளால் அதாவது - காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி - ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது என்று முன்பு கூறப்பட்டதாகவும், இப்போது இருநாட்டு உறவும் ஜனநாயகம், புலம்பெயர்வு மற்றும் நட்பால் வரையறுக்கப்படுவதாகவும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பெங்களூருவில் (தென்னிந்தியா) புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தை நிறுவுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள பின்னணியில், பிரிஸ்பேனில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படுகின்ற அறிவிப்பு வந்துள்ளது.

பெங்களூரு துணைத்தூதரகமானது இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது இராஜதந்திர அலுவலகமாகும்.

பிரிஸ்பேனில் துணைத் தூதரகத்தை திறப்பற்கான இந்தியாவின் திட்டங்களை தான் வரவேற்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese கூறினார்.

இந்நிலையில் குயின்ஸ்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் மாநிலத்தில் ஒரு துணைத் தூதரகத்திற்காக நீண்ட காலம் காத்திருந்ததாக SBS ஹிந்தியிடம் தெரிவித்தனர்.

சில நேரங்களில் இந்தியாவுக்கு விரைந்து செல்ல வேண்டி ஏற்படும்போது தாம் கான்பரா அல்லது மெல்பன் துணைத் தூதரகத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக குயின்ஸ்லாந்தின் இந்திய சமூகங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த சீமா சவுகான் கூறினார்.

குயின்ஸ்லாந்தில் 90,000 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் உள்ள அதேநேரம் இவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்திய துணைத் தூதரகத்தை திறப்பது காலத்தின் தேவையாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.

இதே கருத்தை எதிரொலித்த அசுதோஷ் ரெய்னா, துணைத் தூதரக அலுவலகம் திறக்கப்படுவதானது சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கியமான இணைப்பு புள்ளியை வழங்கும் என்றார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now