பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மலிவு விலையில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை எப்படிக் கண்டறியலாம்?

20241206_Huddle Up!_Volleyball-7_TheHuddle.jpg

Huddle Up! Volleyball program at The Huddle.

பாடசாலை நேரத்திற்குப் பின்னர், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் எப்படியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது முதல் புதிய நண்பர்களை உருவாக்குவது வரை பல நன்மைகளை வழங்குகின்றன. நம் நாட்டில் பல்வேறு செயற்பாடுகளில் சிறுவர்கள் ஈடுபடலாம் என்றாலும், அவை அனைத்தும் எல்லோருக்கும் கட்டுப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மலிவு விலையில் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை எப்படிக் கண்டறியலாம் என்று ஆராய்வோம். Audrey Bourget ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


முக்கிய குறிப்புகள்
  • திறன் மேம்பாடு, சமூக தொடர்புகள் மற்றும் மேம்பட்ட மன மற்றும் உடல் நல்வாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பங்கு கொள்ளும் செயல்பாடுகள் வழங்குகின்றன.
  • நூலகங்கள், இளைஞர்கள் மற்றும் சமூக மையங்கள், பாடசாலை ஒழுங்கமைத்த திட்டங்கள் மற்றும் அரச மானியங்கள் உள்ளிட்ட இலவசமாக அல்லது மலிவு விலையில் செய்யக்கூடிய பல செயல்பாடுகள் உள்ளன.
  • சிறுவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்கள் ஆளுமை மற்றும் திறன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பொருத்தமான ஒரு செயல்பாட்டில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
  • அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள், சொந்தம் என்ற உணர்வை வளர்க்கவும், மிகவும் இணக்கமான சமூகத்திற்குப் பங்களிக்கவும் உதவுகின்றன.
கூடைப்பந்து முதல் சர்க்கஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் வரை, என்று இங்கு வாழும் பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு, பாடசாலை முடிந்த நேரத்திற்குப் பின்னர் எந்த செயல்பாட்டில் ஈடுபடலாம் என்பதைப் பொறுத்தவரை வானமே எல்லை.

பாடசாலை முடிந்த நேரத்திற்குப் பின்னர் ஈடுபடும் செயல்பாடுகளின் நன்மைகள்

இந்த நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் குழந்தைகள் ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக, அவர்கள் ஒரு புதிய திறமையைக் கற்றுக் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியம், நம்பிக்கை மற்றும் சமூக திறன்களையும் இதன் மூலம் மேம்படுத்தலாம்.

“சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் பாடசாலை முடிந்த நேரத்திற்குப் பின்னர் ஈடுபடும் செயல்பாடுகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மட்டுமல்ல, அது சமூக கூறு பற்றியது. புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் நண்பர்களுடன் நேரம் செலவிடவும் அது உதவும்,” என்கிறார் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான Ramón Spaaij.

இந்த நடவடிக்கைகளின் போது சிறுவர்கள் உருவாக்கும் தொடர்புகளால் கிடைக்கும் உணர்வு, குறிப்பாகப் புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் நம்புகிறார்: “மேலும், அது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அனைவருக்கும் ‘இது எனக்கு சொந்தமானது’ என்ற உணர்வு, நல்வாழ்விற்கும் சமூக உணர்வுக்கும் முற்றிலும் அடிப்படையானது என்பதை நாங்கள் அறிவோம். குறிப்பாக புதிதாகக் குடி வந்தவர்கள் பொதுவாக பாகுபாடு அல்லது ஓரங்கட்டப்படுதலுடன் போராடக்கூடும்.”

மெல்பன் நகரிலுள்ள North Melbourne Football Clubபின் ஒரு பிரிவான The Huddle என்ற குழுவின் சமூக மேம்பாட்டுத் தலைவராகக் கடமையாற்றுகிறார் Zakaria Farah.

பாடசாலைகளுக்கு வெளியே சிறுவர்கள் இணைவதற்கு இந்தச் செயல்பாடுகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை அவர் நேரடியாகக் காண்கிறார்.

“நண்பர்களை உருவாக்குவது சில நேரங்களில் இளைஞர்களுக்கு கடினமாக இருக்கலாம், ஆனால் விளையாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, மேலும் நாங்கள் செய்யும் இந்த மற்ற திட்டங்கள் அனைத்தும் மக்களை ஒன்றிணைக்கின்றன, எனவே வலுவான இணைப்புகளை உருவாக்குவது இளைஞர்களுக்குக் கிடைக்கும் மிக முக்கிய நன்மையாகும்.”
20240619_HUJ_Skateboarding-12_TheHuddle.jpg
Skateboarding program at The Huddle.

உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான செயல்பாட்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சிறுவர்கள் என்ன செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் என்ற முடிவெடுக்கும் போது, அவர்களது ஆர்வங்கள், ஆளுமை மற்றும் திறன்களைக் கவனியுங்கள்.

முடிவெடுக்கும் போது அவர்களையும் ஈடுபடுத்துவதை Ramón Spaaij பரிந்துரைக்கிறார். தனது சொந்த குடும்பத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு, தனது மகன்களில் ஒருவர் போட்டி விளையாட்டுகளை விளையாடுவதில் செழித்து வளர்கிறார், மற்றொருவர் வெளியில் மிகவும் நிதானமான சூழலில் இருப்பதை விரும்புகிறார் என்று விளக்குகிறார்.

“ஒரு குடும்பத்தில், இந்த மாறுபட்ட விருப்பத்தேர்வுகள் எவ்வாறு உள்ளன என்பதை, மிக நுண்ணிய அளவில், ஏற்கனவே நீங்கள் காணலாம். அவர்களது முழு ஆர்வத்தையும் பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அதே வேளை, அதிகப்படியான செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதும் தீங்கு விளைவிக்கக் கூடும். உங்கள் சிறாருக்கும் மற்றும் குடும்பத்திற்கும் சரியான சமநிலையைக் கண்டறியவும்.

இலவசமாக அல்லது மலிவு விலையில் செய்யக்கூடிய செயல்பாடுகளை எங்கே கண்டுபிடிப்பது?

இதற்கெல்லாம் செலவு ஒரு பெரிய தடையாகும், சில குடும்பங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டொலர்களை ஒவ்வொரு குழந்தைக்காகவும் செலவிடுகின்றன, ஆனால் இலவசமாக அல்லது மலிவு விலையில் செய்யக்கூடிய பல செயல்பாடுகள் உள்ளன.

பல பாடசாலைகளிலேயே இப்படியான செயல்பாடுகளை செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல மாநில அரசுகள் விளையாட்டு மற்றும் கலை சார்ந்த செயல் முறைகளுக்கு மானியம் வழங்குகின்றன.

கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு, உள்ளூர் நூலகங்கள் ஒரு சிறப்பான இடமாகும்.

தென்மேற்கு சிட்னியில் உள்ள Liverpool நகர சபைக்கான நூலகம் மற்றும் அருங்காட்சியக சேவைகளின் மேலாளர் Elysa Dennis.

“பொது நூலகங்கள் அனைத்தும், சமத்துவத்துடன் வழங்குகின்றன. உங்கள் வருமானம், நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், குழந்தைகள் கற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள் அவை. உங்களுக்கு எதில் ஆர்வமுள்ளதோ, அதில் புதிய திறன்களுக்கு உங்களைத் தயார்படுத்தவும், வேடிக்கையாக இருக்கும் விடயங்களை அணுகவும் முடியும்,” என்கிறார் Elysa Dennis.

இளைஞர் மற்றும் சமூக மையங்கள் மற்றொரு சிறந்த தேர்வாகும்.

Gunditjmara பூர்வீகக் குடி பின்னணி கொண்ட Zachary Lovett, மெல்பன் நகரின் உள் பகுதியில் உள்ள Richmond Youth Hub என்ற அமைப்பின் குழுத் தலைவராக கடமையாற்றுகிறார்.

இந்த மையம் கூடைப்பந்து, கால்பந்து, சமையல் மற்றும் சர்க்கஸ் போன்ற செயல்பாடுகளை வழங்குகிறது.

“எமது மையத்தின் புவியியல் இருப்பிடம் காரணமாக, நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து, நேரத்தைச் செலவழித்து, மற்றவர்களுடன் உரையாடுவதற்குப் போதுமான இட வசதி இல்லை. எனவே, நாங்கள் செய்ய முயற்சிப்பது பெரும்பாலும் குழு விவாதங்கள் அல்லது குழு செயல்பாடுகளை மட்டுமே நடத்துவோம். உதாரணமாக, நாங்கள் சமைத்தால், நாங்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே விவாதிப்போம்,” என்று அவர் கூறுகிறார்.

அனைவரையும் இணைப்பது ஏன் முக்கியமானது?

வடக்கு மெல்பன் மற்றும் Wyndham ஆகிய இடங்களில் இலவச விளையாட்டுத் திட்டங்களை நடத்துகிறது, Huddle எனும் அமைப்பு. இவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம் அனைவரையும் தம்மால் வரவேற்க முடிகிறது என்கிறார் Zakaria Farah.

“பெற்றோர்கள் அல்லது இளைஞர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் போது, அனைவரும் அதில் இணைய முடியாமல் போகலாம், மேலும் பலருக்கு அதை அணுக வாய்ப்பில்லாமல் போகலாம். எனவே, இவற்றை இலவசமாக வழங்குவதன் மூலம், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் இந்த செயல்பாடுகளில் ஈடுபடவும் நன்மைகளைப் பெறவும் வழி வகுக்கிறோம்,” என்கிறார் அவர்.

மலிவு விலைக்கு அப்பால், அவரவர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதும் முக்கியமானது என்று அவர் நம்புகிறார்.


“கலாச்சார உள்ளடக்கமும் மிக முக்கியமானது. அதன் ஊழியர்கள் மற்றவர்கள் கலாச்சாரத்தை மதிக்க, Huddle என்ற அமைப்பு அவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறது, இது பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க உதவுகிறது.”



“நாங்கள் பணியமர்த்தும் எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரிக்கும் இளையோரின் கலாச்சாரங்கள் என்ன, அவர்களின் கலாச்சாரத் தேவைகள் என்ன, கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்,” என்று Zakaria Farah கூறுகிறார்.



தனிப்பட்ட நன்மைகளுக்கு அப்பால், அனைவரையும் புரிந்து கொண்ட சமூகத்தை உருவாக்க இந்தத் திட்டங்கள் மிகவும் உதவும் என்று அவர் நம்புகிறார்.



“எங்களிடம் வரும் இந்த இளைஞர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கற்றுக் கொள்கிறோம், அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்கிறோம், பின்னர் அவர்களிடமிருந்து நாங்கள் புரிந்து கொண்டதற்கேற்ப எமது திட்டங்களை மாற்றியமைக்கிறோம். அதனால், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சமூகமாக மாற்ற இந்த செயல்திட்டங்கள் பங்களிக்கின்றன,”என்று அவர் கூறி முடித்தார்.





ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.



உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி

யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in 

page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.




Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   



Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au

Share

Recommended for you

Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand