வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன.
உங்களது தேவைகேற்ற வீட்டுக் கடனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அரசிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியமான உதவிகளைப்பெறுவதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்று ஆராய்வதுவரை இதில் பல விடயங்கள் உட்பட்டுள்ளன.
மாநில மற்றும் தேசிய அரசு இணையதளங்கள் வீடு வாங்கும் செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த தொடக்கப் புள்ளியாகும்.
நுகர்வோருக்கு பல விடயங்களைக் கற்றுக்கொடுக்கும் அரச இணையத்தளமான Moneysmart, Australian Securities and Investments Commission (ASIC)ஆல் இயக்கப்படுகிறது.
வீடு வாங்க திட்டமிடுபவர்கள் தமக்குப் பொருத்தமான வீட்டுக்கடனைத் தெரிவுசெய்வதில் நாட்டின் வட்டி வீதம் முக்கிய பங்கு வகிக்கிறது என விளக்கும் Australian Securities and Investments Commission மூத்த மேலாளர் Andrew Dadswell, Moneysmart இணையதளத்தில் உள்ள mortgage calculator ஐப் பயன்படுத்தி உங்கள் வீட்டுக்கடனுக்கான சராசரி வட்டி விகிதத்தைக் கணித்துக்கொள்ளலாம் என்கிறார்.

வீட்டுக் கடனை எடுக்கும்போது கருத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடயம் மாறுபட்ட வட்டி விகிதங்கள் அல்லது உங்கள் நிதிச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றுக்கேற்ப அக்கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டமிடல்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதாகும்.
எடுத்துக்காட்டாக, variable rate கடன்களில், வட்டி விகிதம் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. Fixed rate விகிதங்களில், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாறாமல் இருக்கும். அந்த காலம் முடிவடைந்தவுடன், வட்டி விகிதம் பொதுவாக variable rateக்கு மாறிவிடும். அப்போது நீங்கள் மீண்டும் மற்றுமொரு fixed rate காலத்தைப் பெறுவதற்கு வங்கியுடன் பேச்சு நடத்த முயற்சிக்கலாம் என Andrew Dadswell விளக்குகிறார்.
நீங்கள் variable rate கடன் அல்லது fixed rate கடன் என எந்த வகையைத் தேர்வு செய்தாலும், வீடு வாங்குவதற்கான வைப்புத் தொகையாக நீங்கள் கணிசமான தொகையைச் சேமித்திருக்க வேண்டும்.
அதேநேரம் ஒவ்வொருவகை வீட்டுக் கடனுக்கான நிபந்தனைகளும் மாறுபடலாம். மேலும் தகவலின் அளவு அதிகமாகவும் குழப்பமாகவும் இருக்கலாம்.
நிதி ஒப்பீட்டு தளங்களைப் பயன்படுத்துவது பல்வேறு கடன் அம்சங்களின் அடிப்படையில் ‘என்ன இருக்கிறது’ என்பதைப் புரிந்துகொள்வதற்கான வழியாகும்.

இதற்கு அப்பால் தனிப்பட்ட நிதி ஆலோசனையைப் பெறுவது முக்கியம் என்கிறார் Rate Cityயின் ஆராய்ச்சி இயக்குனர் Sally Tindall.
தகவல் மற்றும் ஆலோசனைக்காக நீங்கள் எங்கு சென்றாலும், இறுதியில் கடன் வாங்கும் உங்கள் திறனைப்பற்றி நீங்கள் சுயமாக மதிப்பீடு செய்வது அவசியம்.
வீட்டுக் கடன் விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக, கடன் வழங்குபவர் உங்கள் நிதி நிலைமையை மதிப்பிடுவதற்கு ஆதாரங்களைக் கேட்பார் மற்றும் நீங்கள் கடன் வாங்கும் தொகையை உங்களால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை உறுதி செய்வார்.
பொதுவான தேவைகளில் payslips, பிற வருமானம், வங்கி அறிக்கைகள், ஏதேனும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் அல்லது பொறுப்புகள் பற்றிய விவரங்கள், உங்கள் சேமிப்பு மற்றும் கடன் வரலாறு ஆகியவை அடங்கும்.

வீடு வாங்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் கடன் முன் அனுமதி- pre-approval பெறுவதற்கு முற்படலாம்.
அதாவது, வீட்டை வாங்குவதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு, கொள்கையளவில், கடன் வழங்குநர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதற்கான ஒப்புதல் இதுவாகும். இது இறுதி உத்தரவாதம் இல்லாவிட்டாலும், உங்களது கடன் வாங்கும் திறன் பற்றிய புரிதலை இது அளிக்கும்.
முன் ஒப்புதலுக்கும் வீட்டுக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் இடையிலான காலப்பகுதியில் உங்கள் நிதிநிலைமையில் அல்லது வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் வங்கியுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
வங்கிகள், credit unions மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கடன் வழங்குநர்கள் ஆஸ்திரேலிய சந்தையில் உள்ளனர்.
ஒரு வீட்டுக்கடன் முகவர் பல கடன் வழங்குநர்களுடன் இணைந்து வேலை செய்யலாம் என்பதால் வெவ்வேறு கடன் சலுகைகளை அவர்கள் ஒப்பிட முடியும்.

ஒரு வீட்டுக்கடன் முகவரின் நம்பகத்தன்மை மற்றும் அவரது திறன் தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் அவரின் சேவையைப் பெறுவது முக்கியம் என Madd Loansஇன் நிறுவனர் George Samios வலியுறுத்துகிறார்.
நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, மாநில அல்லது பிராந்திய அரச மானியங்களுக்கு நீங்கள் தகுதி பெறலாம்.
வீடு வாங்குபவர்களில் தகுதியானவர்கள் Home Guarantee Schemeஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை அரச மானியம் கிடைத்தாலும்கூட stamp duty, rates, water, building and pest insurance போன்ற பல செலவுகள் வீட்டை வாங்குவதில் உட்பட்டுள்ளதாக George Samios விளக்குகிறார்.
Home Guarantee Scheme ஊடாக வீடு வாங்குபவர்கள் எவ்வளவு பணத்திற்கு வீடு வாங்க முடியும் என்பதற்கு விலை வரம்புகள் உள்ளன, இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

First home buyers-முதல் வீடு வாங்குபவர்கள் stamp duty அல்லது புதிய வீட்டு உரிமையாளர்களுக்கான மானியங்கள் குறிப்பாக First home super saver scheme போன்ற சலுகைகளுக்கும் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au













