குழந்தைகளுக்கான தடுப்பூசி நிபந்தனைகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வேறுபடுகின்றன. ஆஸ்திரேலியாவில், குடும்ப ஆதரவு கொடுப்பனவுகள் அல்லது குழந்தை பராமரிப்புக்கு தகுதி பெற வேண்டுமெனில் நாடாளாவிய ரீதியில் ‘No Jab, No Pay’ மற்றும் மாநில அளவிலான ‘No Jab, No Play’ கொள்கைகளுக்கு உட்பட்டு தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின்படி குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்,
குழந்தைகளுக்கான நோய்த்தடுப்புக் கொள்கைகள் மாறுபட்டாலும், மருத்துவக் காரணங்கள் உலகெங்கிலும் ஒரே மாதிரியானவையாகவே உள்ளன: தடுப்பூசி திட்டங்கள், தொற்றுநோய்களின் தீவிர விளைவுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டவை.
தடுப்பூசி போட்டுக்கொள்வதானது நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதாக விளக்குகிறார் குழந்தைகளுக்கான தடுப்பூசி கொள்கைகள் குறித்த நிபுணரும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான Katie Attwell.

குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள் பாரதூரமான நோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்திலுள்ள குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகள், மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோர் அடங்குவர்.
ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்பு திட்டம் மிகவும் விரிவான ஒன்று எனவும் இது கடந்த காலத்தில் கடுமையான நோயை ஏற்படுத்திய அல்லது இன்னும் உலகின் சில பகுதிகளில் உள்ள குழந்தை பருவ நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்கிறது எனவும் கூறுகிறார் சிட்னி பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உடல்நலம் தொடர்பான துறையில் பணிபுரியும் இணைப் பேராசிரியர் Philip Britton.

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறையானது 20 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் அட்டவணையை உருவாக்கியுள்ளது, இது இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தால் நிதியளிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் Federal ‘No Jab, No Pay’’ கொள்கையின் கீழ் குடும்ப உதவிக் கட்டணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மொத்த குழந்தை பராமரிப்பு செலவில் 20 முதல் 85 சதவீதத்தை உள்ளடக்கிய Family Tax Benefit மற்றும் குழந்தைப் பராமரிப்பு மானியங்களுக்குத் தகுதிபெற வேண்டுமெனில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி தடுப்பூசிகளைக் போட்டிருக்க வேண்டும் என Services Australiaவில் சமூக தகவல் அதிகாரியாக பணியாற்றும் Justin Bott விளக்குகிறார்.
Services Australiaவில் உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் நீங்கள் கொடுப்பனவு பெறும் போது அவர்கள் இந்தத் தகவலை தாமாகவே பெற்றுக்கொள்வார்கள்.

The Australian Immunisation Register என்பது தேசிய நோய்த்தடுப்புத் திட்டம், பள்ளி திட்டங்கள் அல்லது தனியார் தடுப்பூசி வழங்குநர் மூலம் ஆஸ்திரேலியாவில் நிர்வகிக்கப்படும் அனைத்து தடுப்பூசி குறித்த தரவுகளையும் பதிவு செய்யும் ஒரு தேசிய தரவுத்தளமாகும்.
உங்கள் Medicareஉடன் இணைக்கப்பட்டுள்ள Australian Immunisation Registerஐ குடும்ப மருத்துவர் அல்லது சமூக சுகாதார மையம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வழங்குநரால் மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆனால் உங்கள் குழந்தைக்கு வேறொரு நாட்டில் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் என்ன செய்வது?
உங்களிடம் அதற்கான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவரின் உதவியுடன் Australian Immunisation Registerஇல் அதனை உள்ளிடலாம்.
உங்கள் குழந்தையின் வெளிநாட்டு தடுப்பூசி ஆவணங்கள் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் இருந்தால், Services Australia அதை உங்களுக்காக மொழிபெயர்க்கலாம்.
குழந்தை பராமரிப்புச் சேவைகள், day care மற்றும் kindergartens உள்ளிட்ட ஆரம்பக் கல்வி அமைப்புகளிலும் ‘No Jab, No Play’ கொள்கைகளின் கீழ் நோய்த்தடுப்புத் தேவைகள் நடைமுறையில் உள்ளன.

இந்தக் கொள்கைகள் மாறுபடலாம் என்பதால், தாம் வசிக்கும் மாநிலம் அல்லது பிராந்தியத்திற்கு என்ன பொருந்தும் என்பதை பெற்றோர் சரிபார்க்க வேண்டும் என இணைப்பேராசிரியர் Katie Attwell வலியறுத்துகிறார்.
கடுமையான ஒவ்வாமை போன்ற காரணிகளால் ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட சில தடுப்பூசிகளை வழங்க முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம் என்கிறார் இணைப் பேராசிரியர் Philip Britton.
மருத்துவ விதிவிலக்குகளை வழங்குவதற்கு கடுமையான அளவுகோல்கள் உள்ளன மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வழங்குநர்கள் மட்டுமே ஒரு குழந்தை தடுப்பூசியிலிருந்து விலகியிருக்க வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்து சான்றளிக்க முடியும்.
தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதில் குழப்பம் அல்லது கேள்விகள் உள்ள பெற்றோர்கள், ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புக்கான தேசிய மையத்தின்கீழ் செயல்படும், Sharing Knowledge About Immunisation (SKAI) இணையதளம் போன்றவற்றைப் பார்க்கலாம் என்று இணைப்பேராசிரியர் Katie Attwell கூறுகிறார்.
பெற்றோர் தங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு பற்றி ஒரு சுகாதார நிபுணரிடம் பேசும்போது, எவ்வித தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாக கேள்விகளைக் கேட்க வேண்டியது அவசியமாகும்.
Find out about Australia’s national and state legislation in relation to immunisation requirements for childcare here.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au











